''எனக்கும் யாரும் உதவவில்லை'' - உச்சத்தில் கங்கனா - டாப்சி கருத்து மோதல்!
பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத்துக்கும் டாப்ஸிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. அண்மையில் டிவி நேர்காணலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக கங்கனா பேசியபோது, நடிகை டாப்ஸியை ‘பி’ க்ளாஸ் நடிகை என்றும் ’வெளிநாட்டவர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காதவர்’ என்றும் விமர்சித்தார். மேலும், ’டாப்ஸியின் படங்கள் மாஃபியாக்களால் தயாரிக்கப்படுகிறது. அவர்களைத்தான் டாப்ஸி நேசிக்கிறார்’ என்று மறைமுகமாக கரண்ஜோகரையும் சாடியிருந்தார்.
கங்கனாவுக்கு பதிலடியாக ட்வீட் செய்த டாப்சி, “எனது கடந்தகால மற்றும் எதிர்கால படங்கள் மாஃபியாக்களால் தயாரிக்கப்படவில்லை. நான் ஒருவரது மரணத்தை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன். எனக்கு உண்ண ரொட்டியும் அங்கீகாரத்தையும் கொடுத்த சினிமாத்துறையை கேலி செய்யமாட்டேன். கங்கனா ரனாவத்தும் அவரது சகோதரியும் எனது கடின உழைப்பை இழிவுப்படுத்த நினைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டாப்சி, கங்கனா விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், கங்கனா, ஸ்வரா பாஸ்கர், நான் என பலரும் வெளியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்கள். சினிமாத்துறையில் போராடும் போது யாரும் உதவவில்லை என கங்கனா சொல்கிறார். நம்முடைய பிரச்னைக்கு நாம் தான் போராட வேண்டும். வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவருமே போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சுஷாந்த் அவரும் போராடினார். நானும் என்னுடைய பிரச்னைக்காக போராடிக் கொண்டு இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க முடியாது. ’படி பட்னி ஆர் வோ’ படத்தில் இருந்து நான் நீக்கப்பட்ட போது யாரும் எனக்கு உதவவில்லை. குறிப்பாக கங்கனா வரவில்லை. எனக்கு உதவவில்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஏனென்றால் நம்முடைய பிரச்னைக்கு நாம் தானே போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.