ஒவ்வொரு நூற்றாண்டிலும் மக்கள் தங்களை, தங்கள் வாழ்வை, சொந்த வாழ்வின் இன்ப துன்பங்களை ஏதோ ஒரு கலையோடு பிணைத்துக் கொண்டிருப்பார்கள். தெருக்கூத்து, பொம்மலாட்டம், கரகாட்டம், மக்களிசை, ஓவியம் என இப்படி பலவற்றையும் சொல்லலாம். ஆனால் இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலையான சினிமாவானது மேல் சொன்ன அனைத்தையும் தன்னுள் அடக்கி கலை வெளியில் எல்லையற்ற பேருருவாக திகழ்கிறது. கமல்ஹாசன் எனும் திரைக் கலைஞன் 60 ஆண்டுகளை தான் நேசிக்கும் சினிமாவில் வெற்றி தோல்வியோடு சாத்தியப்படுத்தி இருப்பதை சிறு செய்தியாக நாம் கடந்துவிட முடியாது.
ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன், நாகேஷ், மனோரமா, பாலச்சந்தர் என பல திரை ஆளுமைகளின் கைகளில் தவழ்ந்து இன்று திரைமொழியின் நிகரற்ற ஒற்றைச் சித்திரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
களத்தூர் கண்ணம்மாவில் தடம் பதித்த அந்த பிஞ்சு கால்கள் தனது 60-வது ஆண்டு கலை வாழ்வை பூர்த்தி செய்திருக்கிறது.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல பரிச்சார்த்த முயற்சிகளை செய்தவர், யாரும் செய்யத்துணியாத விசயங்கள் பலவற்றையும் முதன் முதலில் செய்து பார்த்தவர். இதில் பல இழப்புகளை சந்தித்தாலும். தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியிலிருந்து சற்றும் பின் வாங்காத விக்ரமாதித்யன் அவர்.
ஸ்டெடிகேம் ஸ்டெயில் காட்சிகளை முதன் முதலில் குணாவில் முயன்றிருப்பார். இன்று வெளியாகும் எந்த சினிமாவிலும் ஸ்டெடி கேம் காட்சிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
சினிமாவில் காட்சிக்கு உள்ள முக்கியத்துவம் ஒலி அமைப்புக்கும் உண்டு. அதை கருத்தில் கொண்ட கமல் குருத்திப் புனல் படத்தில் டால்பி சவுண்ட் ஒலி அமைப்பை முயன்றிருப்பார். பிறகு வெகு காலத்திற்கு டால்பி சவுண்ட் முறை தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்தது. அதன் பிறகு தான் 3டி 4டி சவுண்ட் முறைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் மெல்ல எட்டிப் பார்த்தது. அதிலும் கூட 3டி சவுண்ட் முறையை விஸ்வரூபம் படத்தில் முதலில் பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் நூறாவது படம் ராஜபார்வை, 1981’ஆம் வருடம் உருவான இந்த சினிமா கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் சினிமா. இதனை சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கி இருப்பார். இந்த படத்தில் தான் தமிழின் முதல் அனிமேசன் காட்சி இடம் பெற்றிருக்கும்.
அவ்வை சண்முகி படத்தில் பெண்வேடத்தில் நடித்திருப்பார் கமல் படப்பிடிப்பு முடிந்த ஒரு நாளில் அதே பெண் வேடத்தில் சென்று கருணாநிதியை சந்தித்தார். 1983’ஆம் வருடம் கருணாநிதி கமல்ஹாசனுக்கு தன் கட்சியில் இணையும் படி கேட்டு ஒரு தந்தி அனுப்பினார். அதற்கு இப்போது வரை தான் பதில் எழுதவில்லை எனவும், அது பற்றி கருணாநிதி எப்போதும் என்னிடம் கேட்டதில்லை என்றும் கூறியுள்ளார் கமல். நடுஇரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது திரைத்துறையில் இருந்து அதனை எதிர்த்து ஒலித்த முதல் குரல் கமலுடையது.
மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களில் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் தேவர்மகன் படத்தில் சிறந்த தயாரிப்பாளர் எனவும் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் அவர்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் தமிழ் ரசிகர்களுக்கு முதன் முதலில் லேப்டாப் காண்பிக்கப்பட்டிருக்கும்.
விக்ரம் படத்தில் தான் முதன் முதலில் ஒரிஜினல் கம்ப்யூட்டர் தமிழ் ரசிகர்களுக்கு காண்பிக்கப் பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து புதிய கம்ப்யூட்டரை வாங்கினார் கமல்ஹாசன்.
பிரான்ஸ்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது 2016’ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் படி சிவாஜி கணேஷனுக்கு பிறகு செவாலியே விருது பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு கிடைத்தது. இவை தவிர பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் விருதுகளையும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றவர் உலக நாயகன்.
இதுவரை கமல் ரஜினி இருவரும் இணைந்து 13 படங்களில் நடித்துள்ளனர். இவ்விரு திரை ஜாம்பவான்களும் இனைந்து நடித்த கடைசி படம் க்ரேஅப்தார். அதில் இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்திருப்பார்.
பொதுவாக சினிமாவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளில் தான் டப்பிங் பேசி வசனங்கள் சேர்ப்பார்கள். ஆனால் விருமாண்டி ஹேராம் ஆகிய படங்களில் லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்களை ரெக்கார்ட் செய்து சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுத்தவர் கமல்ஹாசன். ஹேராம் படத்தில் காந்தியை தவறாக சித்தரித்து இருக்கிறார் கமல் என எதிர்ப்புகள் கிளப்பியது. அதையும் கடந்து முன் நகர்ந்தார் அவர். ஹேராம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் இந்தியில் நடித்து வெளியான படமான ‘ஏக் துஜே கேளியே’-வை. கமலின் குருவான பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹம்பனே தும்பனே ஏக்கு துஜே கேலியே’ என்ற பாடலை முனுமுனுக்காத உதடுகள் இல்லை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த படத்தில் பாடியதற்காக தேசிய விருதைப் பெற்றார்.
கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி. கமலின் அம்மா பார்த்த சாரதி என்றே அழைப்பார். கமலின் சகோதரர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தனர் ஆனால் கமல் கலையின் மீது மட்டுமே ஆர்வம் காட்டியதை அறிந்த அவரது தந்தை அவ்வை சண்முகம் என்ற நாடகாசிரியரிடம் கொண்டு போய் கமலை சேர்த்தார். தன் குருவுக்கு மரியாதை செய்யும் விதமாகத் தான் பின்னாளில் கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு அவரது பெயரை வைத்தார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ‘சிவராத்திரி தூக்கம் போச்சு ஓய்’ இந்த பாடலை முதலில் விளக்கிச் சொன்ன போது ‘ஐயையோ என்ன தம்பி. இதுல நான் நடிச்சா அவ்ளோ மரியாதையா இருக்காதே’ என மனோரமா சொன்னதும். அவருக்காக சில பகுதிகளை மாற்றி அமைத்தார் கமல். அந்த அளவிற்கு மனோரமா மீது பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் அவர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் முதன் முதலில் ரெட் எபிக் கேமராவை பயன்படுத்தி டிஜிடல் சினிமாவில் அடி எடுத்து வைத்தது. இன்று வெளியாகும் 99 சதவிகித தமிழ் சினிமா ரெட் எபிக் கேமராவால் எடுக்கப்படுகிறது.
உலக சினிமா இயக்குனர்கள் தங்கள் சினிமாவில் பயன்படுத்திய யுக்திகளை தமிழ் சினிமாவில் துணிச்சலாக முயன்று பார்த்தவர் கமல்ஹாசன். அதற்கு உதாரணமாக ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோஷாவா இயக்கிய ரோஷோமான் படதின் திரைக்கதை பாணியை விருமாண்டியில் பயன்படுத்தியிருப்பதைக் குறிப்பிடலாம்.
இப்படி எத்தனை எத்தனையோ முதன் முதல்களை சோதனை செய்து சினிமாவை தீரதீர கொண்டாடி வருபவர் கமல். அதற்கு அவ்வப் போது பெரிய இழப்புகளையும் விலையாக கொடுத்தார். தமிழ் சினிமா இன்று நடைபோடும் தொழில் நுட்ப வீதியின் முதல் பாதசாரி கமல்.
இவரது பெரும்பாலான படங்கள் அது வெளியான காலத்தில் கொண்டாடப் படவில்லை ராஜபார்வை,குருதிப்புனல்,குணா,விக்ரம்,ஹேராம்,அன்பேசிவம் இப்படி பல படங்கள் வெளியாகி வெகுகாலம் கழித்து தான் அதற்கான மரியாதை கிடைத்தது.
சினிமா ஒரு மாய புத்தகம்., ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதுப்புதுக் கதைகளைச் சொல்லும் அப்புத்தகத்தின் பக்கங்களில் கமல் ஒரு நிரந்த ஆச்சர்யக் குறி. இன்னும் அறுபது ஆண்டுகள் இக்கலைஞன் உயிர்ப்புடன் இயங்க வாழ்த்துவோம்.
வீடியோ :