கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படம், திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா உள்ளிட்ட பல கபாரணங்களால் தளளிவைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில், முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன், காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பன் வினோத், பிக்பாஸ் புகழ் ஷிவானி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கமல்ஹசானின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பை பெற்றன. மேலும், படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் 117 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் தேதியை, வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி, காலை 7 மணிக்கு அறிவிக்க இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘விக்ரம்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று கூறப்பட்டநிலையில், விரைவில் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவிக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.