‘விக்ரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘விக்ரம்’ படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துக் கொண்டது குறித்து காணலாம்.
‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிங் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், மீண்டும் ‘விக்ரம்’ படத்திற்கு ஏன் இந்த தலைப்பு வைக்கப்பட்டது என்று குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்தின் தலைப்பைக் கேட்டது இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என்றும், 36 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விக்ரம்’ படத்தின் சீக்குவல் என்று நம்புவது உங்களுடைய நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார். எனது பல படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர் என்பதால், ‘சத்யா’ என்று கூட பட தலைப்பு வைத்திருப்பார், ஆனால் இந்தப் படத்திற்கு ‘விக்ரம்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததால் அதை வைத்துள்ளார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜை கேட்காமலேயே ‘விக்ரம் 3’ படத்தை அவர்தான் இயக்குவார் என்று தாம் முடிவு செய்துவிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடலில் உள்ள பாடல் வரிகளுக்கு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறதே என்று கேள்வி எழுப்பியபோது, ஒன்றியம் என்ற வார்த்தைக்கு தமிழில் பல வார்த்தைகள் உள்ளது என்றும், பத்திரிகையாளர் ஒன்று சேர்ந்துள்ள இந்தக் கூட்டமும் ஒன்றியம் தான், இயக்குநர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைத்து நடத்தினால் அதுவும் ஒன்றியம் தான், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்த வைத்துள்ள சங்கமும் ஒன்றியம் தான், இந்த சங்கங்களில் தவறுகள் நடந்தால் படம் பாதிக்கப்படும் அந்த மாதிரி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தில் ‘விக்ரம்’ படம் வெளியிடப்படுகிறதே என கேட்கப்பட்டதற்கு, அது தற்செயலாக நடந்தது என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். முழு வீடியோவை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.