கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ வெற்றிப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், ‘விக்ரம்’ படம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. பட வெளியீட்டிற்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், ‘விக்ரம்’ படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில், பட புரமோஷனுக்காக படக்குழு இன்று டெல்லி சென்றுள்ளது. மேலும், தெலுங்கில் ‘விக்ரம்’ படம் வெளியாவதை முன்னிட்டு ஹைதராபாத்திலும் பட புரமோஷனுக்காக படக்குழு செல்ல திட்டமிட்டுள்ளது.
‘விக்ரம்’ படம் வெளியாகவுள்ள ஜூன் 3-ம் தேதி, பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் நடிப்பில் வரலாற்று படமாக உருவாகியுள்ள ‘பிருத்திவிராஜ்’ மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபுவின் தயாரிப்பில் ‘மேஜர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘விக்ரம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.