சென்னையில் நடைபெற்ற‘கடைக்குடி சிங்கம்’இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2D என்டர்டெயின்மென்ட் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இதனை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், பானு ப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், ஸ்ரீமன் ,இளவரசு, சரவணன், மாரிமுத்து, ஜான் விஜய், டி.இமான், வேல்ராஜ் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கார்த்தி, “இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். அதில் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டனத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இருக்கும். நான் முதன்முறையாக இமான் இசையில் நடிக்கிறேன். அண்ணன் சூர்யா தயாரிப்பில் நான் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. முதன்முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்காதான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் எனக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் பொதுவாக அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அடிதான் கிடைக்கும்” என்றார் கார்த்தி..
சூர்யா பேசும்போது, “இந்தப் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும்தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம். எப்போதும் ஒரு விஷயத்திற்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக வந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா,கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு” என்றார்.