“கடைக்குட்டி சிங்கம்” படத்தில் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருவதாக படக் குழு தெரிவித்துள்ளது.
2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம்”. முதன்முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ் செய்கிறார். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். இன்ஜினியர், டாக்டர் என்று எல்லோரும் எப்படி தங்கள் பெயருக்குப் பின்னால் பெருமையாக போட்டு கொள்கிறார்களோ அதேபோல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட்டில் போட்டுக் கொண்டு ஊரில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐடி வேலை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் பேசியிருக்க்கிறோம்” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியிருக்கிறார்.
“சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு “கடைக்குட்டிசிங்கம்” என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல; படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால்தான் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம்.” என படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.