தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை நடிகை தன்ஷிகா கற்றுக்கொண்டு சிலம்பம் சுழற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த தன்ஷிகா இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பேராண்மை’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். மாஞ்சாவேலு, அரவான், பரதேசி, விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர், 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தின் மூலம் ரஜினிக்கு மகளாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்நிலையில், இவர் சில வருடங்களாகவே தமிழர்களின் தற்காப்பு மற்றும் வீர விளையாட்டான சிலம்பக் கலையை கற்றுத் தேர்ந்துள்ளார்.திருவிழாக்கள், கோயில் விழாக்கள், ஊர்வலங்கள் என அனைத்திலும் தவறாமல் சிலம்பம் இடம்பெற்றுவிடும். பொதுவாக நடிகர்கள்தான் படத்திற்காக சிலம்பம் கற்றுக்கொள்வார்கள். ஆனால், நடிகையான தன்ஷிகா ஆர்வமுடன் சிலம்பம் கற்றுக்கொண்டுள்ளது பாரட்டுக்களை குவித்துள்ளது. ஏனென்றால், அழிந்து வரும் கலைகளில் சிலம்பமும் இடம்பிடித்துள்ளது. இதுபோன்று பிரபலங்கள் கற்றுக்கொள்ளும்போது, அது இன்னும் மக்களிடம் போய் சேர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
வீடியோவில் தன்ஷிகா மழையில் நனைந்துகொண்டே மின்னல் வேகத்தில் சிலம்பத்தை லாவகமாக பிடித்து இரு கைகளாலும் சுற்றுவது பார்ப்பவர்களை புருவம் உயர்த்த வைக்கிறது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “சிலம்பம் கற்றுக்கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது. பவர் பாண்டியன் மாஸ்டருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.