'காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்: ட்ரெய்லர் போலதான் படமும் இருக்கிறதா?

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்: ட்ரெய்லர் போலதான் படமும் இருக்கிறதா?

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்: ட்ரெய்லர் போலதான் படமும் இருக்கிறதா?
Published on

ட்ரெய்லரிலேயே கலகலப்பையும் சலசலப்பையும் எகிறவைத்தது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கம், அனிருத் இசை, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பு என செம்ம காம்போவாக வெளியாகியுள்ளது. அனிருத்துக்கு 25வது படமாம். வாழ்த்துகள் ப்ரோ. தமிழ் சினிமாவுக்கு நீங்கள் மிக மிக முக்கியமானவர்.

பகலில் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும்போது நயன்தாராவையும் இரவு பப்பில் பவுன்சராக இருக்கும்போது சமந்தாவையும் ஒரே நேரத்தில் காதலிக்கிறார்; காதலிக்கப்படுகிறார் ராம்போ (விஜய் சேதுபதி). இதற்குக் காரணம் ‘டிஸ்சசோசியேட் ஐடிண்டிட்டி சிண்ட்ரோம் ’ எனப்படும் வினோத மன நோய்தான் என்றும் அவரை காதலிக்கும்போது இவரையும், இவரை காதலிக்கும்போது அவரையும் தெரியாது எனவும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையான காரணம் என்ன? நயன்தாராவையும் சமந்தாவையும் விஜய் சேதுபதி எப்படி காதலித்தார்? இருவருக்கும் உண்மை தெரிந்ததா? இருவரையும் எப்படி சமாளிக்கிறார்? யாரை திருமணம் செய்துகொள்கிறார்? இதுதான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கதை.

‘96’ படத்திற்குப்பிறகு விஜய் சேதுபதி சோலோவாக நடித்த படங்கள், பெரிய அளவில் ரசிக்க வைக்கவில்லை. இதில் டபுள் ஷாட் பட்டாசாய் நடிப்பில் வெடித்திருக்கிறார். வழக்கமான ஒருவருக்கு இப்படி ஒரே நேரத்தில் இரண்டு காதலிகள் கிடைத்திருந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், விஜய் சேதுபதிக்கு ஒரு பிரச்னை. அதைத் துடைத்து எடுப்பது ஒரே நேரத்தில் நயன்தாரா, சமந்தா என இரண்டு தேவதைகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? ரகளை செய்திருக்கிறார் விசே. தனது வாழ்க்கையையே மாற்றிய இரண்டு தேவதைகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் வசனங்கள், காஃபியை டீயையும் மிக்ஸ் பண்ணி குடிக்கும் காட்சி, இருவரையும் சமாளிக்கமுடியாமல் திணறும் காட்சி என கலகலப்பூட்டுகிறார் விஜய்சேதுபதி. இருவரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் ‘ஐ லவ் யூ டூ.. ஐ லவ் யூ டூங்க’ என்று சொல்லும் காட்சிகளில் எல்லாம் நம் இதயமும் ‘ஐ லவ் யூ டூ’ என்கிறது.

நயன்தாரா தனது எக்ஸ்பிரஷன்களால் நம் இதயத்தை கொய்துவிடுகிறார். படத்தில் குறிப்பாக, பாராட்ட வேண்டிய காட்சி என்றால் நயன்தாரா, தம்பி-தங்கையுடன் மாப்பிள்ளைப் பார்க்கச் செல்லும் காட்சிதான். பிறந்தவீட்டை விட்டு புகுந்தவீட்டில் வாழ்நாள் முழுக்க வாழப்போகும் பெண், அந்தவீடு எப்படி இருக்கிறது என்று பார்க்கவிடுவதே இல்லை. இனி, வாழப்போகும் வீடு அடிப்படை அத்தியாவசிய வசதிகளைக் கொண்டதா, அவளது விருப்பத்துக்கேற்ப இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்கவிடாமல் திடீரென்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல், பெண்ணைத் திருமணம் செய்து புகுந்தவீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்கள் பெற்றோர். அதை, உடைப்பதுபோல் அமைந்திருக்கிறது நயன்தாராவே தம்பி, தங்கையுடன் மாப்பிள்ளைப் பார்க்க செல்லும் காட்சி. நயன்தாரா சொந்தக் குரலில் பேசியுள்ளார். நடிப்பைப் போலவே அவரின் குரலும் வசீகரிக்கிறது.

’சாரியோ தேங்ஸோ முதல்ல கண்ணைப் பார்த்து பேசக்கத்துக்கோ’ என்று நம் கண்களுக்கு பேரழகுடன் கதீஜாவாக கம்பேக் கொடுத்திருக்கிறார் சமந்தா. கடந்த 2018 ஆம் ஆண்டு சமந்தா ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, இப்போதுதான். சமந்தாவின் எக்ஸ்பிரஷன்கள், ஸ்ரீசாந்த்தை ’போடா’ என்று சொல்லும் உடல்மொழி, ஹேர்ஸ்டைல் என இளமை ப்ளஸ் புதுமையுடன் ’செம்மந்தா’ சொல்ல வைக்கிறார். நயன்தாரா எக்ஸ்பிரஸ் வேகத்தில் எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்தால் கொஞ்சம்கூட குறையாமல் தனது கியூட் எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசி, விஜய் சேதுபதியைப்போலவே பார்வையாளர்களும் இருவரில் யாரைப் பாராட்டுவது யாரை குறைசொல்வது என்ற குழப்பத்துக்கு தள்ளிவிடுகிறார்கள். சமந்தாவின் பிறந்தநாளான இன்று படம் வெளியாகி அவருக்கு மறக்கமுடியாத மாபெரும் கிஃப்டாக அமைந்துவிட்டது.

இவர்களுடன் பிரபு, கலா மாஸ்டர், உசேன், மாறன், கிங்ஸ்லி, பிரபு, சித்ரா லட்சுமணன்,கூட்டணியும் காத்து வாக்கில் பல காமெடிகளை செய்கின்றன. ஆனால், டயலாக்கே இல்லாமல் இவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து சிரிக்க வைக்கிறவர் ‘கராத்தே’ உசேன் தான். ரியல் லைஃபில் அவர் சிலை செய்வது, சிலுவையில் அறைந்துகொள்வது என சிந்திய ரத்தத்தைவிட படத்தில் அவர் சிந்தும் ரத்தம்தான் ஹைலைட். விஜய்சேதுபதியைப் பார்த்து பொறாமைப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சிகளில் காமெடியில் கதிகலங்க வைத்துவிடுகிறார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு செட் அப் ஃபாதராக நடிக்க வரும் நடிகர் சித்ரா லக்‌ஷ்மணன் “அடிச்சி கேட்டாலும் ராம்போவுக்கு நான் தான் அப்பன்” என்று ’மணி ஹெய்ஸ்ட்’ டென்வர் புகைப்படம் போட்ட டீசர்ட்டை அணிந்து வந்து பேசும் காமெடிகள் வேற லெவல் கிரியேட்டிவிட்டி.

’நானும் ரெளடிதான்’ படத்தில் பெப்பி சாங் இல்லாத குறையை ’டூ... டூ.. டூ’ என டபுள் ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் அனிருத். பின்னணி இசை சில இடங்களில் காதுக்குள் கதகளி ஆடினாலும் அவரின் பின்னணி இசைதான் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமே. ’டூ டூ’ பாடலும் அதன் பின்னணியில் ஒலிக்கும் நாதஸ்வர இசையும் ஒளித்துவைக்க முடியாத அளவுக்கு இதயத்தில் இப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவை எஸ்.ஆர் கதிர் செய்துள்ளார். அவரது கேமராவின் ‘கதிர்வீச்சு’ பெருநகரத்தையும் கிராமத்தையும் அழகாக படம்பிடித்துக் காண்பித்திருக்கிறது படத்தின் ஒளிப்பதிவு. குறிப்பாக, அதிரப்பள்ளியின் அழகை அள்ளிக்குவித்திருக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வழக்கமான காமெடி கலாட்டா காம்போவை எடுத்து, அதில் ’நானும் இயக்குநர்’தான் என்று நிரூபித்துவிட்டார். ஓப்பனிங்கில் ரியாலிட்டி ஷோ, மறதி என அவர் எடுத்துக்கொண்ட விதம் அதற்குப்பிறகு அவர் கொடுக்கும் டிவிஸ்ட் எல்லாம் ஓகேதான். கண்மணி, கதீஜா, மின்மினி, பார்கவ், இதயநிலா என கதாபாத்திரங்களின் பெயர்களே ‘சார்பட்டா பரம்பரை’ படத்தினைப்போலவே நம் மனதில் பட்டா போட்டு படம் விட்டு வெளியில் வந்தபிறகும் நினைவில் இருக்கும்படி பதிய வைத்ததிலேயே வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன்.

ட்ரெயிலரில் படம் ஆபாசமாக இருப்பதுபோல் தெரிந்தாலும் முழுமையாக பார்க்கும்போது ஆபாசம் இல்லாமல் பாசம் நிறைந்து ஆஸமாக இருக்கிறது. முதல் பாதியில் வரும் ராம்போ விஜய் சேதுபதியின் அம்மா பேசும் வசனங்கள் அவரை ராக்கி பாய் ரேஞ்சுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.

படத்தில் குறைகளும் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காதலை, விஜய் சேதுபதியின் பின்னணி ஃப்ளாஷ்பேக்கால் நியாயப்படுத்த முயற்சி செய்தாலும் காதல் மன்னன்கள், கல்யாண ராமன்கள், ரெமோக்கள், ரோமியோக்கள் உள்ளிட்டோருக்கு காலில் சலங்கையை கட்டி தலையில் கிரகத்தையும் வைத்துவிடுவதுபோல் அமைந்திருக்கிறது. சும்மாவே ஆட்டம்போடும் இவர்கள் இதுபோன்று புதிய புதிய ஃப்ளாஷ்பேக்குகளை உருவாக்கி அதையே காரணம் காட்டி ஆட்டம் போட துவங்கிவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது.

பிரபு நடத்தும் ரியாலிட்டி ஷோவில் விஜய்சேதுபதி தெளிவாக இருப்பதாக வெளிப்படுத்திவிடுகிறார். அப்படியிருக்க, அதற்குப்பிறகும், விஜய் சேதுபதியை இரண்டு தேவதைகள் நம்பிக்கொண்டிருப்பது முரண்பாடாக உள்ளது. இரண்டாம் பாதியில் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் காட்சிகளில் ஒரு கட்டத்தில் இரண்டு தேவதைகளும் ’தேவைதானா’ என யோசிக்கவைத்து விடுகிறார்கள். அதேபோல், இரண்டு பேரையும் விட்டுக்கொடுக்க மனமில்லாத விஜய்சேதுபதி மூன்றாவது இதேபோல் இன்னொரு தேவதை அதேநேரத்தில் கிடைத்திருந்தால் முடிவெடுக்க முடியாமல், லவ் யூ டூ என்பதற்கு பதில் லவ் யூ த்ரி என்று ஆட்டம் போட்டிருப்பாரோ என்கிற கேள்வியும் எழுகிறது. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்பதும் மைனஸ்.

‘காலம் கிடக்கு நிறைய’ என்பவர்கள் ஜாலியாகப் போய் பார்த்து ரசிக்கலாம். அதைத்தாண்டி பெரிய முத்திரை எதையும் பதிக்கவில்லை காரெகா.

- வினி சர்பனா

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com