ஓடிடி திரைப் பார்வை: சந்தானம் படத்தின் சீரியஸ் வெர்ஷன்தான் ’கார்மேகம்’!

ஓடிடி திரைப் பார்வை: சந்தானம் படத்தின் சீரியஸ் வெர்ஷன்தான் ’கார்மேகம்’!
ஓடிடி திரைப் பார்வை: சந்தானம் படத்தின் சீரியஸ் வெர்ஷன்தான் ’கார்மேகம்’!
Published on

சினிமாவோ, சின்னத்திரையோ… நடிப்பில் கலக்கும் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘கார்மேகம்’. ராதிகாவுடன் சாய் குமார், சாந்தினி, சைதன்யா கிருஷ்ணா, அஷ்ரிதா, நந்தினி ராய், ஷாரித், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் ஷரன் கோபிஷெட்டி இயக்கிய இத்தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சிறுவயதிலிருந்தே ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதி திடீரென்று கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு குடும்பமும் இடி விழுந்ததுபோல் பேரதிர்ச்சியில் கதறிக்கொண்டிருக்கும்போது வீட்டு வாசலில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. படுகாயமடைந்தவரைக் காப்பாற்றும்போதுதான், அந்த இரட்டைப் படுகொலையைக் செய்த கொடூரனே இவன்தான் என்பது தெரிய வருகிறது. அந்தக்கொடூரனை பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்கிறது? புதுமணத் தம்பதியின் இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? அதனை, மோப்பம் பிடிக்கும் காவல்துறையிடமிருந்து அக்குடும்பம் தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறது? இவைதாம் ‘கார்மேகம்’ தொடரின் கதை.

கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை அஜய்யின் அம்மா சரஸ்வதியாக ராதிகா சரத்குமார். ராதிகாவுக்கு நடிப்பை சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஆனால், மகன் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தபிறகும்கூட தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டு, புதுசேலையுடன் சீரியல் ‘சித்தி’ போலவே வலம் வருகிறார். தன் மகன், மருமகளைக்கொன்ற கொலைக்காரன் மீது ரெளத்திரம் கொள்ளும் காட்சிகளில் மட்டும் செம்ம ஸ்கோர் பண்ணிவிடுகிறார் ராதிகா. மர்மப்பார்வையுடன், தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை ‘ஓகே’ சொல்லும் விதமாக நடித்திருக்கிறார், சம்மந்தி கொமாராஜுவாக நடித்துள்ள சாய்குமார்.

ஷ்ரவாணியாக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, மார்த்தாண்டமாக நடித்திருக்கும் சைதன்யா கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பு எதார்த்தமாகவும் கவனிக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது. ஷ்ரவாணியின் கதாப்பாத்திரம் கொஞ்சம் விவரமானவாரமாகவும் கூர்மையானவராகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், பிசியோதெரபிஸ்ட் ஷ்ரவாணியாக வரும் சாந்தினி ஒரு எபிசோடில்கூட பிசியோதெரபியை அளிக்கவில்லை. மாறாக, தனக்கு சம்பந்தமே இல்லாமல் மருத்துவர்கள்போல் நோயாளிக்கு மாத்திரைகள் கொடுக்கிறார், அடிபட்ட கொலைக்காரனுக்கு தலைக் காயத்திற்கு உடனடியாக தையலே போடுகிறார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். அதுவும், தன்னுடைய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு க்ளாஸ்மெட் தோழியோ, தோழனோகூட இல்லாமல் தன்னிடம் ‘தெரபி’ எடுத்துக்கொள்ளும் நோயாளியிடம் ஷேர் செய்யும் அளவுக்கு அப்பாவியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புலனாய்வு அதிகாரி ஐபிஎஸ் நந்தினியாக நடித்திருக்கும் நந்தினி ராய் உட்பட பெரும்பாலான காதாப்பாத்திரங்களின் நடிப்பும் சுமாரே. அவரே போதைப்பொருள் விற்பதும் அதை ஓலைச்சுவடி கால மிகப்பழமையான காரணத்திற்காக நியாயப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு குற்றவாளிக்கு பின்னாலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதற்காக, அந்த குற்றத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. அதுவும், பொதுமக்கள் செய்வதைவிட பொறுப்புமிக்க காவல்துறையிலுள்ளவர்கள் செய்யும் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. போதைப்பொருள் விற்பனை செய்து வேறொரு லிமிட் போலீஸில் சிக்கிக்கொள்பவனின் லேப்டாப்பை எல்லாம் நுழைந்து அதை கைப்பற்றி டெலிட் செய்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். இப்போது ஓடிடியிலும்.

தொடரின் ப்ளஸ்கள்

“கண்டுப்பிடிச்சிட்டீங்களா? அவன் கிடைச்சுட்டானா?” என்று கொலை செய்யப்பட்டோரின் குடும்பம்தான் வழக்கமாக கொலைக்காரனைப் பற்றி போலீஸிடம் கேட்டு டார்ச்சர் செய்வதோடு அழுத்தம் கொடுக்கும். ஆனால், ‘கார்மேகம்’ அப்படியல்ல. கொலைக்காரனைத் தேடி போலீஸ் அலைந்துகொண்டிருக்கும். கொலைக்காரன் யாரென்று கொலை செய்யப்பட்டோரின் குடும்பத்திற்கு முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். அப்படியிருக்க, கொலைக்காரன் குறித்த தடயங்களை மறைத்துக்கொண்டிருக்கும் கொலைசெய்யப்பட்டோரின் குடும்பம்.

வழக்கமாக கொலைகள் நடக்கும். அந்த கொலைகளை செய்தது இவரா அவரா என்று சஸ்பென்ஸ் வைத்து கன்ஃபியூஸ் செய்து க்ளைமாக்ஸில் யார் என்பது தெரியவரும்.ஆனால், முதல் காட்சியிலேயே புதுமண தம்பதியை படுகொலைச் செய்த கொலைக்காரன் யார் என்பது பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டு விடுவதால், அந்தக் கொலைக்கான காரணம் என்ன? கொலைக்காரனின் பின்னணியில் இருப்பது யார் என்ற சந்தேகமும் பதைபதைப்புமாய் அடுத்தடுத்த எபிசோடுகளைப் பார்க்கத் தூண்டுகிறது திரைக்கதை.சுதாஜா சித்தார்த்தின் ஒளிப்பதிவும் ஸ்ரீசரண் பகலாவின் பின்னணி இசையும் கதைக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

கொலை செய்தவன் எப்படி கரெக்டாக கொலைச்செய்யப்பட்ட குடும்பத்தின் வீட்டருகிலேயே வந்து விபத்துக்குள்ளாகிறான் என்பதற்கான காரணமும் ஓகேதான். இப்படி ஒரு சில ப்ளஸ்களை வைத்துகொண்டு உடனடியாக தொடரைக்குறித்த ஒரு முன்முடிவுக்கு வந்துவிடவேண்டாம். மைனஸ்களே அதிகம் உள்ளன.

ட்விஸ்ட் என்கிற பெயரில் கொலைக்கான காரணமும் கொலைக்கு பின்னணியில் இருப்பது யார் என்பதும் தெரியவரும்போது, ஊழல் ஒப்பந்ததாரர் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புபோல, ஒட்டுமொத்த திரைக்கதையும் பொல பொலவென சரிந்து கீழே விழுந்து தரைமட்டமாகிவிடுகிறது. ‘அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியதுபோல் இருக்கிறது எனது கட்சிக்காரனின் கபாலம்’ என்ற வடிவேல் டயலாக் போல, திரைக்கதையையும் கொத்திக் குதறி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷரன் கோப்பிசெட்டி. ’இவ்வளவு கன்றாவியான க்ளைமாக்ஸை பார்த்ததுண்டா யுவர் ஆனர்’ என்று சொல்லத்தோன்றும். கொலைக்கான காரணம் தெரியும்போது ‘இதுக்காடா இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணோம்’ என்று நம்மை நாமே நொந்து நூடூல்ஸ் ஆவது நிச்சயம்.

தடயங்களை மறைக்கச்செல்லும் காட்சியில் இரண்டுபேர் மட்டுமே போதுமானதாக இருக்கும் சூழலில், ஏதோ குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடுவதுபோல் குடும்பத்தோடு செல்வதும் வேடிக்கையாக இருக்கிறது.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு முக்கிய காரணமே, படுகொலை செய்யப்பட்ட புதுமண பெண்ணின் அம்மாதான். ஆனால், அது எதுவுமே அவருக்கு தெரியாதது போலவும் அவருக்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமே இல்லாதது போலவும் முடிப்பது துப்பாக்கியை தோட்டாவுக்குள் ஒளித்துவைப்பதுபோல் இருந்தது.

சாய்குமாருக்கு எப்படி இப்படியொரு சந்தேகம் வந்தது? அவர், ஏன் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் அளவுக்குப் போனார்? தனது மகளுக்கு டெஸ்ட் எடுத்தார் ஓகே. வருங்கால மருமகனுக்கு எப்படி டிஎன்ஏ பரிசோதனை செய்தார்? அதுவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எப்படி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தார்? அப்படியே, எடுத்தாலும் அதன் முடிவை ஏன் தனது மனைவியிடம் முன்கூட்டியே சொல்லவில்லை? இப்படி, பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

க்ரைம்- த்ரில்லர் வெப் சீரிஸுக்கே உண்டான சஸ்பென்ஸ் எல்லாம் ஒவ்வொரு எபிசோடாக செம்மயாக வைக்கத் தெரிந்த இயக்குநர் ஷரன் கோபிசெட்டி, ஒரு கொலை… அந்தக் கொலைக்கான சரியான மோட்டிவ்வை சொல்வதில் மிஸ் பண்ணிவிட்டார்.

மொத்தத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்து வெளியான ’பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் சீரியஸ் வெர்ஷன்தான் இந்த ‘கார்மேகம்’ வெப் சீரிஸ். ஆனால், பாரிஸ் ஜெயராஜ் நகைச்சுவைப் படத்தில்கூட முக்கியமான காட்சிகளில் கொஞ்சம் சீரியஸ் மிக்ஸ் ஆகியிருக்கும். ஆனால், சீரியஸான ‘கார்மேகம்’ வெப் சீரிஸில் அதுவும் மிஸ்ஸிங்.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com