கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து

கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து
கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து
Published on

ஒரு தகப்பனாக, கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல் அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழாவில், வைரமுத்து பேசும்போது, ‘’கமலுக்கு இது, சிலைகளின் வாரம் போலும். பெற்றுத் தந்த தந்தைக்கு ஒரு சிலை பரமகுடியில். கற்றுத்தந்த தந்தைக்கு இங்கே இன்று சிலை. கமல்ஹாசனை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பாலசந்தர் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? என்று. ’என் வருமானவரிக்கு காரணமானவர் அவர்தான்’ என்று சொன்னார் கமல். இதை விட ஒருவார்த்தையில் அவரை பாராட்ட முடியாது. இருவருக்கும் இடையில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். அது இரண்டு கற்கண்டு கட்டிகள் முட்டிக்கொண்டது போலதான். ஒரு தகப்பனாக, கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன். 

தமிழ்நாட்டுக்கு கலைப் பொக்கிஷங்களை கொடுத்தவர் பாலசந்தர். அவர் போட்டது வீரிய விதை என்பதை இருவரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இங்கே சாதித்த பெருமக்கள் பக்கத்தில் நான் இருப்பதற்கு காரணம், பாரதிராஜாவும் பாலசந்தரும். அவர் எழுத்து மேதை. தமிழில் ஆழ்ந்த நுணுக்கங்களை அறிந்தவர். ’சிந்து பைரவி’யில் ஒரு பாடல். உழைக்கும் மக்களுக்கும் கடைசி தமிழனுக்கும் பாடல் சேர வேண்டும் என்று கவலை ஏதுமில்ல, ரசிக்கும் மேட்டுக்குடி சேரிக்கு சேரவேணும் அதுக்கு பாட்டப் படி’ என்று எழுதினேன். எழுதியதை பார்த்துவிட்டு யோசித்த பாலசந்தர், இரண்டு ’ம்’ மட்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்று கேட்டார். 

’சேரிக்கும் சேரவேண்டும் அதுக்கும் பாட்டுப்படி’ என்பதுதான் அது. இப்படி, இரண்டு புள்ளிகளை வைத்து கற்பித்தவர் பாலசந்தர். இந்த (ரஜினி, கமல்) இரண்டு கலை சின்னங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பாலசந்தர். அவர் சிலையை இங்கு நிறுவியிருக்கிறீர்கள். இந்த சிலையை கமல் வைத்ததில் ஒரு குறியீடு இருக்கிறது. வாழ்வில் உன்னை யார் மேம்படுத்தினாரோ, அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை இந்த கலை உலகம் உணர வேண்டும்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com