தப்பியதா டைனாசர் ? ஜூராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் !

தப்பியதா டைனாசர் ? ஜூராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் !
தப்பியதா டைனாசர் ? ஜூராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் !
Published on

1993 ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியப்படுத்திய படம் என்றால் அது ஜூராஸிக் பார்க்தான். ஸ்டீபென் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான ஜூராஸிக் பார்க்கை, இப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இதன் பின்பு வெளியான ஜூராஸிக் பார்க் - லாஸ்ட் வேர்ல்டு மற்றும் ஜூராஸிக் பார்க் 3 ஆகியவை பெரிய அளவில் வெற்றிப் பெறாவிட்டாலும். உலகெங்கிலும் உள்ள ஜூராஸிக் பார்க் ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்பு 2015 ஆம் ஆண்டு ஜூராஸிக் வேர்ல்டு என்ற பெயரில் வெளியிடப்பட்ட சக்கப் போடு போட்டது. இப்போது, இதன் தொடர்ச்சியாக ஜூராஸிக் பார்க்: தி ஃபாலன் கிங்டம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் கதைதான் என்ன ? கோஸ்டா ரிகாவுக்கு அருகில் அமைந்திருக்கும் இஸ்லா நபுலார் தீவு. கடந்த பாகத்தில் மரபணு மாற்றப்பட்ட டைனோசர்களால் ஏற்பட்ட சேதத்தையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜூராஸிக் வேர்ல்டு தீம் பார்க் இழுத்து மூடப்படுகிறது. எனவே, அங்கிருந்த நூற்றுக்கணக்கான டைனோசர்கள், அங்கேயே அப்படியே வாழ்ந்து வருகின்றன. ஆனால், அந்தத் தீவில் இருக்கும் எரிமலைகள் வெடிக்க துவங்குகின்றன. இதனால், அந்த தீவில் உள்ள டைனோசர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்ட டைனோசர்களை அப்படியே வி்ட்டுவிட வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் டைனாசர்களை காப்பாற்ற முடியாது என கைவிடுகிறது.

இந்நிலையில் அந்தப் பார்க்கை உருவாக்கியவர்களில் ஒருவரான பெஞ்சமின் லாக்வுட்டிடமிருந்து ஜூராஸிக் வேர்ல்டின் நிர்வாகியாக இருந்த பிரைஸ் டாலாஸுக்கு அழைப்பு வருகிறது. பெஞ்சமின் லாக்வுர்ட் டைனோசர்களைக் காப்பாற்றி, வேறு ஒரு தீவில் விடவேண்டுமென விரும்புகிறார். அவரது சொத்தை நிர்வகித்துவரும் மில்ஸ் இந்த டைனோசர்களைப் பிடித்துவந்து, விற்பனை செய்ய திட்டமிடுகிறான். பிரைஸ் டாலாஸ் மற்றும் கிரிஸ் பிராட் மற்றும் டைனோசர் பாதுகாப்புக் குழுவினருடன் அந்தத் தீவுக்குச் சென்று டைனோசர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறாள். இதில் வெற்றிப்பெற்றார்களா இல்லையா என்பதை நொடிக்கு நொடி பரபரப்புடன் இறுதி வரை சொல்லப்பட்டிருக்கிறது. 

முந்தைய பாகத்தில் ஜூராஸிக் வேர்ல்டு நிர்வாகியாக இருந்த பிரைஸ் டாலாஸும், சொல்வதை கீழ்படிந்து நடக்கும் ப்ளூ டைனோசரை வளர்ப்பராக வந்த கிரிஸ் ப்ராட்டும்தான் பிரதான கதாப்பாத்திரங்கள். இதில், கிரிஸ் ப்ராட் திரையில் தோன்றியவுடன், விஜய் அஜித் ஓப்பனிங்களுக்கு நிகராக கிடைக்கும் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.  முந்தைய ஜூராஸிக் படங்கள் வரிசையில் இருக்கும் க்ளிஷேக்கள், இதிலும் இருக்கிறது. உதாரணமாக மெதுவாக "டொக் டொக்" என நடந்து வந்து டைனோசர்கள் அட்டாக் செய்வது, மனிதர்களை துரத்தும் காட்சி, இருட்டு அறையில் டைனோசரின் முகம் மட்டும் நிழலில் தெரிந்து திகில் ஊட்டுவது என எல்லாமும் இருக்கிறது. இந்தப் பாகத்தில் பார்வையாளர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை சிறப்பாக கடத்தியிருக்கிறார்கள். அது, டைனோசரும் ஒரு உயிரினமே தீவில் டைனோசர்கள் கருகும்போது, பார்வையாளர்களும் பரிதாபப்பட்டு "ஐயோ.. பாவம" என உச் கொட்டுகிறார்கள்.

பார்வையாளனுக்கு இந்தப் படத்தில் ஒரு ஈடுபாடு வருவதற்கு முக்கியக் காரணம் இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று கிரிஸ் ப்ராட் மற்றும் அவர் வளர்த்த ப்ளூ டைனோசர். இந்தப் பாகத்திலும் ஒரு கொடூர மரபணு மாற்றப்பட்ட ரொம்ப புத்திசாலியான டைனோசர்தான் வில்லன் (இப்படிதான் சொல்ல வேண்டும்). மேலும் எல்லா ஜூராஸிக் பட வரிசையிலும் ஒரு சிறுமியோ, சிறுவனோ வருவார்கள். இதிலும் அதேபோல உண்டு. ஜூராஸிக் பார்க் படத்தின் மிக முக்கிய அங்கமாக இருந்த ஜான் வில்லியம்ஸின் தீம் மியூசிக் இறுதியில் ஓடவிடப்படுகிறது.

ஆனால் இந்தப் படத்துக்கு மைக்கல் கியாசினோ பின்னணி இசை அமைத்துள்ளார், நொடிக்கு நொடி தெறிக்க விட்டிருக்கிறார். இந்தப் பாகத்தை இயக்கியிருப்பவர் ஸ்பேனிஷ் இயக்குநரான ஜே.ஏ.பயனோ, த்ரிலர் படங்களை இயக்கிய இவர், அதே பாணியில் இதனையும் அணுகியுள்ளதால் பார்வையாளர்களுக்கு த்ரில் நிச்சயமாக கிடைக்கிறது. ப்ளூ டைனோசர் இன்னும் உயிரோடு இருப்பதால், அடுத்த பாகமும் நிச்சயம் என இப்போது சூடம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.

ஒரு காட்சிக் கூட சோர்வில்லாமல் செல்வதுதான் இந்தப் பாகத்தின் மிகப்பெரிய ப்ளஸ். அதேபோல சீட் நுனி வரை கொண்டு செல்லும் காட்சிகளும் ஏராளம். எல்லாவற்றுக்கும் மேலாக டைனோசர் எனும் பிரம்மாண்ட உருவம் நம் மனதில் பதிந்துவிடுவதால் வாயை திறந்துக்கொண்டு பார்ப்பதும் நிச்சயம். எது எப்படியோ, ஜூராஸிக் பார்க் வரிசையில் அதே பழைய மாவில் விதவிதமான தோசைகளை சுட்டுத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அதன் சுவை குறையாமல் இருப்பதுதான் ஹைலைட். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com