ரஜினி அரசியலுக்கு படித்தவர்கள் வர வேண்டும் என்றார். அப்படி என்றால் படித்தவர்கள் இன்றைக்கு அரசியலில் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.
பல கட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த் இன்று சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதை சரிசெய்ய படித்தவர்கள், இளைஞர்கள், நல்லவர்கள் முன்வர வேண்டும். அரசியல் சாக்கடை என்று விலகி செல்லக் கூடாது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.
அவரது அறிவிப்பின்படி திட்டம் 1: தேர்தலின்போது தேவையான கட்சி பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு அவற்றை அகற்றிவிட வேண்டும் என்பது. அதனால் அதிகார துஷ்பிரயோகம் நடக்காது.
திட்டம் 2: இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 60-லிருந்து 65 சதவீதம் வரை படித்தவர்கள், இளைஞர்களை சேர்க்க வேண்டும். மீதமுள்ள 35 சதவீதம் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
திட்டம் 3: ஆட்சிக்கு என்று ஒரு தலைமை. கட்சிக்கு என்று ஒரு தலைமை. இதுவே என் முடிவு. முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. நான் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரஜினியின் இந்தப் பேச்சு குறித்து சில கேள்விகள் எழுகின்றன. அப்படி என்றால் இன்றைக்கு இளைஞர்களின் பங்களிப்பு அரசியலில் இல்லையா? படித்தவர்கள் வர வேண்டும் என்கிறார். அப்படி பார்த்தால் படித்தவர்கள் இல்லாத கட்சி என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. இது குறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் புதிய தலைமுறையிடம் பேசுகையில்,
“சமகால அரசியல் இயக்கவியல் என்று ஒன்று உண்டு. அதை ரஜினிகாந்த் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். உதாரணமாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். அப்படி என்றால் எங்கள் காலத்தில் அரசியலில் படித்தவர்கள் இல்லை என்று கூற முடியுமா? நாவலர் நெடுஞ்செழியன் அந்தக் காலத்திலேயே எம்.ஏ., மறைந்த அன்பழகன் அந்தக் காலத்தில் பி.ஏ. ஹானர்ஸ் எம்.ஏ., அண்ணா அந்தக் காலத்திலேயே டபுள் எம்.ஏ. கிரேக்க இதிகாசத்தில் இருந்து அத்தனை இதிகாசங்களையும் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம். காங்கிரசை எதிர்த்து வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கத்திலே படித்தவர்கள் இருந்ததால்தான் நாங்க அந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தோம்.
இளைஞர்கள் என்று ரஜினி சொல்வதை எடுத்து கொண்டால், கருணாநிதி முதல்வராகும் போது அவரது வயது 41தான் ஆகி இருந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் அந்தக் காலத்திலேயே இன்ஜினியர். அப்போது அவருக்கு வயது 32 தான் இருக்கும். ஆக, அந்தக் காலத்தில் படித்தவர்கள்தான் வந்தார்கள். ரஜினி சொல்வது எதுவும் புதியதல்ல; ரஜினிக்கு நேரடி அரசியலிலே வருவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது பழைய காட்சியின் ரீ பிளாஷ் பேக். 1996இல் இதே போல்தான் பேசினார். அன்றும் பத்திரிகையாளர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல்தான் பேட்டியை முடித்தார். உடனடியாக அமெரிக்கா சென்றார். அதேபோல் இன்றும் அதையே செய்திருக்கிறார். ஹோட்டல்தான் மாறி இருக்கிறது. வேறு மாற்றம் இல்லை” என்கிறார்