சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92-வது முறையாக நடைபெறும் ஆஸ்கர் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஆக்கின் பீனிக்ஸ் பெற்றுள்ளார்.
சாலையில் நடந்து செல்லும்போதும், பேருந்தில் பயணம் செய்யும்போதும், வேலை செய்யும் இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார் படத்தின் கதாநாயகன். அவரைச் சுற்றி அவரே கட்டமைத்த, அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்புதான் ஜோக்கர் திரைப்படம். பாதி கற்பனை, மீதி விரக்தியுடன் வாழும் நாயகனுக்கு எல்லா இடங்களிலும் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
அந்த ஏமாற்றமும் புறக்கணிப்பும் பெருகி கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி நிலைக்கு தள்ளப்படுகிறார் அவர். தான் ஒரு கோமாளியா அல்லது போராளியா என்று தெரியாமல் சுற்றித் திரியும் நாயகன் கடைசியாக போய்ச்சேரும் புள்ளி என்ன என்பதை சொல்லியது ஜோக்கர்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆக்கின் பீனிக்ஸ், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படங்களுள் இதுவும் ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் தனது உடல்மொழியால் திரைப்படத்திற்கு உயிரூட்டியிருப்பார். சிரிப்பு, அழுகை, கோபம் என பல உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜோக்கர் நாயகனுக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ஆக்கின் பீனிக்ஸ் பெற்றுள்ளார்.