’த்ரிஷியம்’ ரீமேக்கில் ரஜினி நடிக்காதது இதற்குத்தானா? உண்மையைச் சொன்ன இயக்குனர்!
’த்ரிஷியம்’ தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பது பற்றி இயக்குனர் ஜீது ஜோசப் இப்போது விளக்கியுள்ளார்.
மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ’த்ரிஷ்யம்’. ஜீது ஜோசப் இயக்கியிருந்த இந்தப் படம் அங்கு மெகா ஹிட் ஆனது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.
(மோகன்லாலுடன் ஜீது ஜோசப்)
இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷூம், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார்கள். அந்த மொழிகளி லும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்திருந்தனர். தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் உருவான இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்கியிருந்தார்.
(பாபநாசம் படத்தில்...)
இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்குமாறு முதலில் ரஜினியிடம் கேட்டதாக, ஜீது தெரிவித்திருந்தார். ரஜினிக்கு கதை பிடித்திருந்தாலும் சில காட்சிகளை தனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் இதற்கு முன் சொல்லியிருந்தார். இந்நிலையில் எதற்காக ரஜினி இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை நிராகரித்தார் என்பதை ஜீது ஜோசப் இப்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘த்ரிஷ்யம் படத்தின் ஒரு காட்சியில் போலீஸ்காரர்கள், மோகன்லாலை அடிப்பார்கள். இந்தக் காட்சியை மலையாள ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று பயந்தேன். ஆனால், அந்தக் காட்சியை, ரசிப்பார்கள் என்று மோகன்லாலும் வலியுறுத்திச் சொன்னார். அது போலவே நடந்தது. ஆனால், தமிழில் ரஜினி, அந்த காட்சியை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நம்பினார். அதனால்தான் கதைப் பிடித்திருக்கிறது என்ற அவர், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை’ என்றார் ஜீது ஜோசப்.