தனது மார்பிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியபோது தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன் என்று நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.
தமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழி களில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், கூறும்போது, ‘’எனக்கு பலர் உதவி செய்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் அமர்சிங். அவர், டயாலிஸ் செய்து கொண்டிருந்த நிலையில், எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த நேரத்தில் கதறி அழுதேன். இனி வாழக்கூடாது என தற்கொலை முடிவுக்குச் சென் றேன். யாரும் எனக்கு உதவி செய்ய முன்வராததால் இப்படியொரு முடிவுக்கு செல்ல நினைத்தேன்.
அப்போது, அமர்சிங் சிகிச்சையில் இருந்து வந்து, எனக்கு ஆதரவாக நின்றார். இப்போது அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? காட்பாதராகவா அல்லது வேறு யாரோவாகவா? அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டி சகோதரி என நிரூபித்தேன். ஆனால், மக்கள் எங்களை இணைத்துப் பேசுவதை நிறுத்தினார்களா? பேசிகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பேசுவது பற்றி எனக்கு கவலை இல்லை.
(அமர்சிங்குடன் ஜெயப்பிரதா)
இந்த ஆணாதிக்கச் சூழ்நிலையில் அரசியலில் இருக்கும் பெண்களுக்கு உள்ள நிஜமான போர் இது. நான் ஒரு கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், எனக்கான பிரச்னைகள் ஓயவில்லை. சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ஆஸம் கான் எனக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக்கொண்டிருந்தார். என் மீது ஆசிட் வீச முயற்சி செய்தார். நாளை உயிருடன் இருப்பேனா என உத்தரவாதம் இல்லாமல் இருந்தேன்.
வீட்டை விட்டு கிளம்பும்போது என் அம்மாவிடம் நிச்சயமாக வீடு திரும்புவேனா என்று தெரியாது என சொல்லிவிட்டுதான் செல்வேன். ‘மணிகர்ணிகா’ படத்தில் காண்பிக்கப்படுவது போல, தேவைப்படும் போது, பெண்கள் துர்க்கை அவதாரம் எடுக்க வேண்டும்’’ என்றார்.