டிஜிட்டல் பண மோசடியை குடிசைத் தொழில் போல செய்யும் கிராமம்...! - ஜம்தாரா.

டிஜிட்டல் பண மோசடியை குடிசைத் தொழில் போல செய்யும் கிராமம்...! - ஜம்தாரா.
டிஜிட்டல் பண மோசடியை குடிசைத் தொழில் போல செய்யும் கிராமம்...! - ஜம்தாரா.
Published on

வங்கியில் இருந்து பேசுவதாகவும்., உங்களது ATM கார்டை மாற்றவேண்டும் என்றும் சில போன் கால்கள் நமக்கு வரும். நம்மிடம் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை தமிழ் கலந்த வடமொழி வாசனையில் கேட்பார்கள். ஆனால் அப்படி எந்த வங்கியும், எப்போதும் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை நேரடியாக கேட்பதில்லை. 

போன் மூலம் வசீகரமாக பேசி மக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று பணத்தை கொள்ளை அடிக்கிறது ஒரு கும்பல். இதனை பிஷிங் என்கிறார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் வட இந்தியாவில் சில தொலைதூர கிராமங்கள் பிஷிங்கை அவ்வூரின் குடிசைத் தொழில் போலவே செய்து வருகின்றன. அப்படியான கிராமங்களில் ஒன்று தான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜம்தாரா கிராமம் என்கிறார்கள். சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு “ஜம்தாரா: சப்கா நம்பர் ஆயேகா” என்ற இணைய தொடரை நமக்குக் கொடுத்திருக்கிறது நெட் பிளிக்ஸ். ஜம்தாரா கிராமத்தின் இளைஞர்கள் பலர் போன் மூலம் பண மோசடியில் ஈடுபடுவதை அதிரடி ஆக்‌ஷன் வகைமை வெப் சீரிஸாக இயக்கியிருக்கிறார் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சௌமேந்திர பதி.

சன்னி, ராக்கி இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே தொழிலை தேர்வு செய்தாலும் இருவரின் இலக்கும் வெவ்வேறு. சன்னி, ஜம்தாராவின் பெரிய பணக்காரனாக வேண்டும் என நினைக்கிறான். ராக்கி, அரசியல் ஆசை கொண்டவன். இவ்விருவரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் உள்ளூர் அரசியல்வாதி ப்ரஜேஷ் பானாக அமித் சாயல் நடித்திருக்கிறார். இந்த கூட்டத்தை ஒழித்துக்கட்ட அவ்வூருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை அதிகாரி டோலி ஷாஹூ. 

ஏற்கெனவே காவல் துறைக்கும் ஜம்தாரா கிராமத்தின் கொள்ளைக் கும்பலுக்கும் ஏகபோக பந்தம் இருப்பதால். குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறுகிறார் காவல்துறை அதிகாரி டோலி ஷாஹூவாக வரும் அக்‌ஷா பர்தாசனி. அவருக்கு உதவியாக வேலை செய்யும் மற்றொரு காவல்துறை அதிகாரி திப்யந் பட்சாரியாவின் நடிப்பு அல்ட்டிமேட். மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளியாக அறியப்படும் சன்னிக்கும், ராக்கிக்கும் அடிக்கடி தகராறு நடக்கிறது. சன்னி அவனை விட வயதில் மூத்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவளும் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக சன்னியை பின் தொடர்கிறாள். இந்த உறவால் சன்னியை அவனது சகாக்கள் கேலி செய்கிறார்கள். ஒரு அரசியல் கூட்டத்தில் வெடிக்கும் துப்பாக்கி குண்டால் உயிரிழக்கிறான் சன்னியின் மைத்துனன். சன்னிதான் சுட்டான் என்ற தோற்றம் அங்கு உருவாகிறது. பிறகு வேறு வழியின்றி சன்னி வில்லனான அவ்வூர் அரசியல்வாதி அமித் சாயலை நாட வேண்டியதாகி விடுகிறது. முடிவு தான் யாரும் கெஸ் பண்ண முடியாத ட்விஸ்ட். 

இக்கதையினை மேலோட்டமாக அணுகினால் இது ஏதோ ஒரு திருட்டு கும்பலின் கதை என்று மட்டுமே தோன்றும். ஆனால் இயக்குநர் சௌமேந்திர பதி இதற்குள் சில சிறப்பு கிளைக் கதைகளை உருவாக்கி பேசுகிறார். குறிப்பாக எப்போதும் இணைந்து சுற்றும் நண்பர்கள் இருவர் புராண கதைகளை நடப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி பேசுவதும் அவர்களின் விநோத நடிப்பு அலைவரிசையும் ரசனை. சன்னி தன்னை விட வயதில் மட்டுமல்ல சாதி அந்தஸ்திலும் உயர்வாக கருதப்படும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அப்பெண்ணின் தாய் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது “பணம் வேணும் மா பணம்...! அவன் நம்மள விட சாதியில கம்மியோ ஜாஸ்தியோ பணம் முக்கியம்.” என்கிறாள் அப்பெண். வறுமையானது சாதியை தூக்கி எறியும் என்பதை அழுத்தமாக பேசுகிறது அக்கதாபாத்திரம். என்றாலும் அவளுக்கு சன்னியின் மீது தீராத அன்பும் உண்டு. அதனை வெறும் பணத்திற்கான உறவாக சுருக்கவில்லை இயக்குநர். 

இந்த வெப் சீரிஸில் பாதிக்கும் அதிகமானோர் புதுமுகம்தான் அதுவே ஜம்தாராவின் பெரும் பலம். அச்சு அசலாக ஜார்கண்ட் ரூரல் கிராமத்தின் புழுதி படிந்த முகங்களை அப்படியே நம்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். நீங்கள் இந்த அதிரடி வெப்சீரிஸில் லயித்து நிற்க மற்றுமொரு முக்கியக் காரணம் கவுஷல் ஷாவின் ஒளிப்பதிவு. செஃப்பியா டோனில் ஜம்தாராவின் புழுதி மண்ணை வெக்கை பறக்க நமக்கு சுடச் சுட தந்திருக்கிறார் கவுஷல் ஷா. 


இந்திய திரைப்படைப்புகளுக்கு இதுவரை இருந்த சென்சார் நெருக்கடிகள் எதுவும் வெப்சீரிஸ்களுக்கு இல்லை என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இதனால் முழு சுதந்திரத்துடன் ஒரு படைப்பை, ஒரு படைப்பாளியால் அணுக முடிகிறது. அப்படித்தான் முழு சுதந்திரத்துடன் ஜம்தாரா உருவாகி இருக்கிறது.

பத்து எபிஸோடுகளாக பிரிக்கப்பட்டு நெட்பிளிக்ஸில் பதிவேற்றப் பட்டிருக்கும் ஜம்தாராவின் ஒவ்வொரு எபிஸோடும் தனி ரகம். அடுத்தடுத்த எபிஸோடுகளை பார்க்கத் தூண்டும் சஸ்பன்ஸ் ஒவ்வொரு எபிஸோடின் முடிவிலும் இருக்கிறது. நடப்பு ட்ரண்டிங்கில் ஆடியன்ஸின் பல்சை சரியாக பிடித்து கில்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சௌமேந்திர பதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com