இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம், நாளை (ஆகஸ்ட் 10) உலகம் முழுதும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அண்மையில் வெளியான முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றது. நாளை வெளியாக உள்ள 'ஜெயிலர்' படத்தைக் காண ரஜினிகாந்தின் ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் பட கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா இல்லை.. இனி ’கேரளம்’ தான் - சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!
அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கக்கூடிய இர்வின் பகுதியில் வசிக்கக்கூடிய தமிழர்கள் ஜெயிலர் படத்தைக் கொண்டாடும் விதமாக, அவர்களுடைய குடியிருப்புக்கு முன்பாகவே, சுமார் 40 அடி உயரம் இருக்கக்கூடிய ரஜினி பேனரை வைத்து 25 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம் செய்ததுடன், சரவெடியையும் வெடிக்கச் செய்துள்ளனர். ஆக, நம்மூரைப்போலவே ரஜினி போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவில் ’ஜெயிலர்’ படத்தின் ரிசர்வேஷன் புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்பதிவில் மட்டும் 7.50 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.6.21 கோடி) வசூலித்திருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. 2023இல் எந்தவொரு இந்திய படமும் இந்த அளவுக்கு முன்பதிவில் வசூல் செய்தது இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. படம் வெளியாகுவதற்கு முன்பாக முன்பதிவு கலெக்சன் ரூ. 10 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 'ஜெயிலர்' என்ற இதே தலைப்பில்
மலையாளத்தில் தயன் சீனிவாசன் நடிப்பிலும் ஒரு திரைப்படம்
உருவாகியுள்ளது. இந்த திரைப்படமும் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மலையாள 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெளியீட்டை வரும் 18 ஆம் தேதிக்கு படக்குழு
தள்ளிவைத்துள்ளது.