”படத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது”- ஜெய்பீம் இயக்குநர் வருத்தம்

”படத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது”- ஜெய்பீம் இயக்குநர் வருத்தம்
”படத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது”- ஜெய்பீம் இயக்குநர் வருத்தம்
Published on

ஜெய்பீம் திரைப்படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புக்கு சூர்யாவை தாக்குவது துரதிஷ்டவசமானது எனக்கூறி, படத்தின் பொருட்டு சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜெய் பீம் திரைப்படத்துக்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல இத்திரைப்படத்துக்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தை குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக்‌ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் பிரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தை பார்த்தனர். அப்போது கவனத்துக்கு வந்திருந்தாலும்கூட, படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியுமென்று நம்பினேன்.

இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யா அவர்களை பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளராகவும், நடிகராவும் இத்திரைப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ” எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com