விஜய்யின் அடுத்த படத்திற்கான கேமிராமேன் யார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் இயக்குநர் யார் என்பது மட்டும் இன்னும் உறுதி செய்யப்படாமல் குழப்பம் நீடிக்கிறது.
மெர்சல் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கிறார் என செய்தி வெளியானது. அதனை உறுதி செய்யும் விதத்தில் முருகதாஸ் பட்டும் படாமல் பதில் சொல்லி வந்தார். ஆக அவர்தான் இயக்குநர் என பலரும் நம்பி வந்தனர். இவருக்கு அடுத்து அட்லீ பெயர் அடிப்பட்டது. விஜய் படத்தை மீண்டும் அட்லீயே இயக்க இருக்கிறார் என செய்தி பரவியது. அதற்கு அட்லீயும் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் இப்போது முருகதாஸ் முகம்தான் முன்னுக்கு நிற்கிறது. ‘தளபதி 62’ க்கு அவர்தான் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்த ‘நீலகாசம் பச்சகடல் சுவன்ன பூமி’ படத்தின் மூலம் புதிய கேமிராமேனாக அறிமுகமான கிரீஷ் கங்காதரன்தான் விஜய்யின் அடுத்த படத்தின் கேமிராமேன் என ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை அடுத்து கேமிராமேன் கிரீஷ் ட்விட்ரில் ட்ரெண்டிங் ஆனார். ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்கிறது விஜய்யின் நெருங்கிய வட்டாரம். கிரீஷ் கங்காதரன் மலையாளத்தில் வெளியான ‘குப்பி’ படத்துக்கான கேரள அரசின் நடுவர் சிறப்பு விருதைப் பெற்றவர்.
ஃபஹத் ஃபாசில் நடித்த ‘மரியம் முக்கு’, துல்கர் சல்மான் நடித்த ‘களி’, ‘சோலோ’, நிவின் பாலி மற்றும் த்ரிஷா நடித்துவரும் ‘ஹே ஜூடு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். விஜய் படம் மூலம் முதன்முறையாக தமிழில் ஒளிப்பதிவு அறிமுகமாகிறார். இவரின் ‘சோலோ’ நேரடி தமிழ் படமில்லை. ‘தளபதி 62’ படம்தான் அவரின் நேரடி தமிழ்ப் படமாக இருக்கப் போகிறது.