விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. தெலுங்கு பட இயக்குநரான வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஜெயசித்ரா உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கிறது விஜய்யின் வாரிசு.
ட்ரெய்லர், டீசர், பாடல்கள் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் வியாபாரம் களைகட்டியிருக்கிறது. அதன்படி, அமேசான் ப்ரைமுக்கான OTT உரிமத்துக்கு 60 கோடிக்கும், சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றியுள்ள சன் டிவியிடம் 50 கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறது.
இதுபோக, இந்தி டப்பிங், வெளிநாட்டு உரிமம் என தலா 32 கோடி ரூபாய்க்கு இருவேறு நிறுவனங்களும் கைப்பற்றியிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது எனக் குறிப்பிட்டு விஜய்யின் மாஸ் லுக்குடன் வாரிசு படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது விஜய் இருக்கும் சில ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களும் ரிலீசாகியிருக்கிறது.
அதனை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் குதூகலித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் அனைத்தும் 2019ல் வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான மஹரிஷி படத்தோடு ஒத்துப்போவதாக குறிப்பிட்டும் பதிவுகள் காணமுடிகிறது.
இதனையடுத்து விஜய்யின் வாரிசு படம் மகேஷ் பாபுவின் மஹரிஷி படத்தின் ரீமேக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாது படம் ரீமேக்காக இருந்தாலும் மஹரிஷி படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதை போலவே வாரிசு ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டிருப்பதும் “படம் ரீமேக்காக இருந்தாலும் ஓகே.. ஷூட்டிங்கும் ரீமேக்கா?” என்று கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.
இருப்பினும் தனியார் தமிழ் இணையதள சேனலுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் வம்சி, “வாரிசு படம் குடும்ப பின்னணியை கொண்ட முழுக்க முழுக்க தமிழ் படம்தான்” என தெரிவித்திருக்கிறார். இதனிடையே வாரிசு படம் ரீமேக்காக இருந்தாலும் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகும் போது கட்டாயம் ரசிகர்களை கவருவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என மறுதரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக மகேஷ்பாபுவின் ஒக்கடு, போக்கிரி ஆகிய படங்கள் விஜய் நடிப்பில் கில்லி, போக்கிரி என தமிழில் வெளியாகி இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் விஜய் படங்களின் வரிசையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.