லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக, மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாக்கி இருந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் விஜய் படங்களின் ஆடியோ லான்சும் அதில் அவர் மறக்காமல் சொல்லி வரும் குட்டி கதையும் மிகவும் பிரபலம். அப்படியிருக்கையில், ஆடியோ லான்ச் இல்லை என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இசை வெளியிட்டு விழா ரத்து ஆனதற்கு பல்வேறு காரணங்கள் அப்போது விவாதிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை வெளியீட்டு விழா அசம்பாவிதம் மற்றும் மதுரை ஹேப்பி ஸ்டீட் நிகழ்ச்சியில் நடந்த அனுபவங்கள் காரணங்களாக சொல்லப்பட்டாலும் அரசியல் காரணங்கள் கூட பலரால் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்து ஆனதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், ”லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சை பொறுத்தவரை பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் முதலில் தோன்றிய விஷயம். இரண்டாவதாக எவ்வளவு டிக்கெட் வேண்டும் என்று முதலில் கணக்கு போடப்பட்டது . அப்படி பார்த்தபோது 6000 சீட்டுகள் மட்டுமே இருக்கும் என்ற இடத்தில் எங்களுக்கு தேவையான சீட்டுகளின் எண்ணிகையோ 12,300 ஆக இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து சிலர் தங்களுக்கும் டிக்கெட் வேண்டும் என்றுகேட்டர்கள். அதையெல்லாம் சேர்த்தாலே 70000 சீட்டுகள் தேவைப்பட்டது.
இந்த ஆடியோ லான்ச் என்பது காசு கொடுத்து ஒரு குறிப்பிட்டவர்கள்தான் வர வேண்டும், வர கூடாது என்று அழைக்கும் நிகழ்ச்சி என்பது கிடையாது. இத்தகைய நிகழ்வுகளில் எந்த விதமான விபரீதமும் நடந்துவிடக் கூடாது. அப்படி எதாவது நடந்தால் அது ஒரு தழும்பு மாதிரி ஆகிவிடும் என்ற கட்டாயத்தின் பேரில் தான் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
இருப்பினும் ஆடியோ லான்ச்க்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யபட்டு கொண்டுதான் இருந்தது. ஒரு கட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விட கூடாது என்பதற்காகவே ஆடியோ லான்ச் ஐ நடத்த வேண்டாம் என்ற முடிவினை எடுத்தோம்.
லியோ மற்றும் விஜய் அண்ணாவை பொறுத்தவரை ஆடியோ லான்ச் வைத்துத்தான் இப்படத்தை காட்ட வேண்டும் என்பது இல்லை. அது பார்வையாளர்களுக்கே தெரியும்.” என்று தெரிவித்தார்.