டிவி சீரியல்களில் ஏன் தவறான உறவுகள் குறித்த கதைகளே இருக்கின்றன? -நீதிபதிகள் கேள்வி

டிவி சீரியல்களில் ஏன் தவறான உறவுகள் குறித்த கதைகளே இருக்கின்றன? -நீதிபதிகள் கேள்வி
டிவி சீரியல்களில் ஏன் தவறான உறவுகள் குறித்த கதைகளே இருக்கின்றன? -நீதிபதிகள் கேள்வி
Published on

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் தவறான உறவுகள் குறித்த கதையையே சித்தரிக்கிறது. அதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்டப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ். இவர் அடுத்ததாக நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “ இராண்டாம் குத்து”. இப்படத்தின் போஸ்டகளை உடனடியாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து நீக்கவும் படத்தை வெளியிட நிரந்தர தடை கோரியும்  சமூகநீதி கல்வி பண்பாட்டு மைய செயலர் பெருமாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் “இரண்டாம் குத்து” எனும் பெயரில் திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இருக்கும் வசனங்கள் ஆபாசமாகவும், கேட்போர் முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. அதற்கான போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் கொண்டதாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பயில்வதற்காக அதிக அளவில் இணையதளங்களை சார்ந்திருக்கும் சூழலில் இதுபோன்ற திரைப்படத்தின் டீசர் இணைய தளத்தில் வெளியானது ஏற்கத்தக்கதல்ல.

திரைப்படங்கள் பாரம்பரியத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. ஆனால் ஒரு சிலர், வணிக நோக்கில் மிக மோசமான ஆபாசமான விஷயங்களை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்படங்களை எடுக்கின்றனர். இவை சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன. ஆகவே இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை உடனடியாக அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து நீக்கவும், படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் மற்றும் முக்கிய நடிகர்களிடமிருந்து 5 கோடி ரூபாயை அபராதம் விதித்து வசூலிக்கவும் உத்தரவிடவேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "அக்கால படங்கள் குடும்ப உறவையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தன. ஆனால் தற்போதைய படங்களில் பல ஆபாசம் மற்றும் வன்முறையை பரப்புவதாக உள்ளது. தற்போது தகாத வார்த்தைகள் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை பெரும்பாலான படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக அமைகின்றன. தவறான உறவுகள் குறித்தே பெரும்பாலான கதை அமைகிறது. அதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி பயின்று வருகின்றனர். இது போன்ற டீசர்கள் pop-up ஆகும் போது, வளரும் பருவத்தினர் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது இதனால் மாணவ மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், YouTube, Facebook, Google நிறுவனத்திற்கும் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையை எதிர் மனுதாரராக இணைத்து அவர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com