கொரோனா பரவல், ஊரடங்கு அறிவிப்புகள், தியேட்டர்கள் மூடல் என தமிழ் சினிமா முடங்கிக்கிடக்கிறது. சில நாட்களாக படப்பிடிப்புகள் மெல்ல தொடங்கியுள்ளன. ஆனால் மெகா பட்ஜெட் படங்களின் நிலை கிணத்தில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்க நினைக்கும்போது கொரோனா வந்துவிட்டது.
இந்தியன் 2 படத்துடன் தொடர்புள்ள சிலரிடம் பேசிய கருத்துகளை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பதிவு செய்துள்ளது. "மீண்டும் படத்தைத் தொடங்குவது பற்றி தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் ஷங்கர் கடிதம் எழுதியுள்ளார். அதிகம் பேருடன் படப்பிடிப்பை நடத்துவதற்கு அரசு அனுமதியளித்ததும் அவர் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளார். ஊரடங்கு நாட்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இழப்பைச் சரிசெய்வதற்காக பட்ஜெட்டைக் குறைப்பதற்கு ஷங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்க சம்மதித்தார். இனிமேல் பட்ஜெட்டைக் குறைத்தால் தான் நினைத்த படத்தை எடுப்பது சிரமம் என்று வருத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உறுதியளித்துள்ளார் கமல்ஹாசன். இந்தியன் 2 படத்தை முடித்ததும் அந்தப் படத்திற்குச் செல்வார் என்று நம்பினார் ஷங்கர். லோகேஷ் படத்திற்கான பணிகளும் தொடங்கவில்லை.
தற்போது பிரபல புகைப்படக்கலைஞர் வெங்கட்ராமை வைத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் கமல். இனிமேலும் நேரத்தை வீணடிக்க விரும்பாத இயக்குநர் ஷங்கர், மீண்டும் இந்தியன் 2 படத்தைத் தொடங்குங்கள் அல்லது அடுத்தப் பட வேலைகளுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டுள்ளேன் என தயாரிப்பாளர்களுக்கு திட்டவட்டமாக கடிதம் எழுதிவிட்டார்" என்று இந்தியன் 2 படத்துடன் தொடர்புடையவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் ஷங்கரின் கடிதத்தைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய சிஇஓ சில நாட்களில் அவரைச் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கண்ணன், "இதெல்லாம் ஒரு வதந்தி. ஷங்கர் தரப்பிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்தப் படத்திற்கு 500 - 600 நபர்கள் தேவைப்படுவார்கள். அதற்காக திட்டமிட்டு வருகிறோம். படப்பிடிப்பைத் தொடங்கும் நிலையில் இருக்கிறோம். இதுபற்றி கமல்ஹாசனுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும்" என்றார்.