சபரிமலை பிரச்னையை மையப்படுத்தி பிரபல இயக்குனர் லால் ஜோஷ் படம் இயக்குவதாகக் கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த எதிர்ப்பு பெரும் போராட்டமாக மாறியது. கலவரமும் ஏற்பட்டது. இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் ஜனவரி 2 ஆம் தேதி, சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தப் பிரச்னைகளை மையமாக வைத்து மலையாளப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஷ், அடுத்து இயக்கும் படத்துக்கு, ’நால்பாதியொன்னு’ (Nalpaathionnu - 41-நாற்பத்தியொன்று) என்று டைட்டில் வைத்துள்ளார்.
சிக்னேச்சர் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.பிரஜித், அனுமோத் போஸ், ஆதர்ஸ் மேனன் தயாரிக் கும் இந்தப் படத்தில் பிஜூ மேன ன், நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பல புதுமுகங்களும் நடிக்க இருக்கின்றனர். இதன் கதையை பி.ஜி.பி ரகீஷ் எழுதியுள்ளார். இதன் ஷூட்டிங் தலசேரியில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் கதை சபரிமலை பிரச்னையை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் 41 என்கிற டைட்டில் சபரி மலைக்கு விரதம் இருக்கும் நாட்களை குறிக்கிறது என்றும் 41 என்கிற டிசைன் ஐயப்ப சாமி அமர்ந்திருப்பது போல வடிவமை க்கப் பட்டிருப்பது என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், படத்தின் கதை என்ன என்பது பற்றி இயக்குனர் லால் ஜோஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.