லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அபார வெற்றியை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.
தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸாக இருக்குமா அல்லது விஜய்க்கான தனி கதையாக லோகேஷ் உருவாக்கி வருகிறாரா என்ற பல கேள்விகள் விஜய் மற்றும் லோகேஷ் ரசிகரகளிடையே பரவலாக பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் கேரளாவில் தனக்கம் படத்தின் புரோமோஷனின் போது ஃபகத் பாசிலிடம் தளபதி 67 குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதில், “தளபதி 67ல் நீங்களும் நடிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் படமாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய கேரக்டரும் இருக்கும்.” என ஃபகத் கூறியிருந்தார்.
இதனையடுத்து, “விக்ரம் படத்தில் வந்த உங்களின் அமர் கேரக்டருக்கான தனி படம் வருமா?” என்ற கேள்விக்கு, “இது பற்றி தெரியவில்லை. அதற்கான வாய்ப்பிருந்தால் இயக்குநரே அறிவிப்பார்.” என்று ஃபகத் பதிலளித்திருக்கிறார். இது குறித்த வீடியோவை பகிர்ந்து வரும் விஜய் ரசிகரகள், “அப்போ தளபதி 67 LCUதானா” எனக் கேட்டும், “வெயிட்டிங்லயே வெறி ஏறுதே” என்றெல்லாம் ஃபயரெல்லாம் விட்டு ட்ரெண்ட் செய்து தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
முன்னதாக, விக்ரம் படம் பார்க்கும் முன் கைதி படத்தை பார்க்குமாறு லோகேஷ் கூறியிருந்தார். அதன்படியே விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக தளபதி 67 இருக்கப் போகிறதா என்றும் பலரும் கேள்விகளை முன்வைத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதுபோக, விக்ரமில் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் தளபதி 67ல் வரப்போகிறது என்றெல்லாம் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.