உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு அரசியல், திரைத்துறை, பொதுமக்கள் என்று எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்தோடு வருகை தந்து கண்டுகளித்து வருகின்றனர். அப்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் அருண்விஜய், “படத்தில் டூப் இல்லாமல் மாடுபிடி வீரரராக நடிக்க ஆசை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மதுரை என்றாலே தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை மறக்கவே முடியாது. அதுவும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஆகவே இதில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அரசாங்கம் மிகவும் அருமையாக இந்த போட்டியை நடத்தி கொண்டு வருகிறது. காவல் துறை மக்களின் பாதுகாப்பிற்காக அருமையாக செயல்பட்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இந்த செய்தியை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த பங்கு வகிக்கிறீர்கள். இது அனைத்தும் மிகுந்த மகிழ்ச்ச்சியை அளிக்கிறது.
இது போன்ற விஷயங்கள் அனைத்தும், ‘நமது கலாச்சாரம் அழியவில்லை’ என்ற பெருமையை அளிக்கிறது. எனது படங்களில் நிச்சயம் மாடுபிடி வீரராக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது. எனது தந்தை அவரது படங்களில் அப்படி நடித்துள்ளார். அதனை தொடர்ந்து எனக்கும் நடிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசை உள்ளது. ஆனால் அது லேசான காரியம் இல்லை என்பது எனக்கு தெரியும். நான் டூப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வருங்காலங்களில் இது போன்ற கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.