"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல" - ஏ.ஆர்.ரஹ்மான்

"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல" - ஏ.ஆர்.ரஹ்மான்
"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல" - ஏ.ஆர்.ரஹ்மான்
Published on

திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்கு சேவை வரி செலுத்தும்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இசையமைப்பாளரே தன்னுடைய படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com