விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரனின் படப்பிடிப்பு பகுதிகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருக்கிறது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘காடன்’ படம் வெளியானது. அடுத்ததாக அவரது தயாரிப்பிலேயே ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரனும் நடித்துள்ளார். நடிகர் பிரித்திவி ராஜின் அண்ணனான இந்திரஜித் சுகுமாரன் மலையாள சினிமாவில் முக்கியமான உறுதுணை நடிகர். தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நகரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ வெப் சீரிஸில் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷ்ணு விஷாலுடன் ’மோகன்தாஸ்’ படத்தில் இணைந்திருந்தார். தற்போது, இவரது பகுதிகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’களவு’ படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார்.