’உன் பேரைச் சொல்லும்போதே.. முன்பே வா என் அன்பே வா..’ - மெலோடி குயின் ’ஸ்ரேயா கோஷல்’ பிறந்தநாள்!

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷல், இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
ஸ்ரேயா கோஷல்
ஸ்ரேயா கோஷல்ட்விட்டர்
Published on

அதிசயத்திற்குச் சொந்தமான குரல், ஸ்ரேயா கோஷல்!

இம்மண்ணின் மறக்க முடியாத கவிஞர்களில் ஒருவரான நா.முத்துக்குமார், ’உன் பேரைச் சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’ எனும் முத்துமுத்தான வார்த்தைகளைத் தன் முத்திரைபதித்த எழுத்தின் மூலம், ’அங்காடித் தெரு’வில் அழகாய் கோர்த்திருப்பார். அது, எல்லோருக்கும் அமைவதில்லை; எழுதுவதற்கும் சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி இடம்பெற்ற அந்த வரிகள் கவிஞரை மட்டுமல்ல, அதைப் பாடிய பெண் குரலின் பேரையும் சொல்லவைத்ததுதான் அதிசயம். மண்ணுக்குள் வைரம் இருந்தால் மதிப்பு இருக்காது. அது, வெளியில் வரும்போதுதான் உலகமே பிரமிக்கிறது. அப்படியான அந்தக் குரல், இசை உலகின் விலாசத்தை வெளியில் காட்டிய பிறகுதான்... இளசுகள் முதல் பெரிசுகள் வரை அவருடைய பாடல்களைத் தேடித்தேடி, தன் ஃபேவரைட் பட்டியலில் சேமிக்கத் தொடங்கினர். இன்றும் அவர்களை அதே வலைக்குள், கட்டிப் போட்டிருப்பதுதான் பேரதிசயம். அந்த அதிசயத்திற்குச் சொந்தமான குரல், ஸ்ரேயா கோஷல். அவருக்கு இன்று பிறந்த நாள்.

ஒவ்வொரு பாடலையும் ‘உருகுதே... மருகுதே’ என ரசிகர்களை உருகவைக்கும் அளவுக்குப் பாடிவரும் ஸ்ரேயா, பாலிவுட்டில் ஏற்கெனவே பாடல்கள் பாடி அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் வெளியான ‘ஆல்பம்’ படமே, அவருக்கு அடைக்கலம் தந்தது. ‘செல்லமே.. செல்லமே’ என அவர் தொடங்கிய அந்தக் குரல், இன்றுவரை, ‘அம்மாடி... அம்மாடி’ என அவரைப் பேசவைக்கும் அளவுக்கு உச்சத்திற்குக் கொண்டு சென்றது. தடைகள் எதுவாயினும், தடங்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற பாணியில், தமிழ் மொழி அவருக்குத் தெரியாதபோதும், அந்த தமிழ் மொழியிலேயே தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டவர் ஸ்ரேயா.

இதையும் படிக்க: ‘உனை நான் கொல்லாமல்; கொன்று புதைத்தேனே... மன்னிப்பாயா’ - தமிழை கரம்பிடித்த கவிஞர் தாமரை பிறந்தநாள்!

ஸ்ரேயா கோஷல் பாடிய சில பாடல்கள்!

அந்த வகையில், ’ஜூலி கணபதி’யில் ’எனக்குப் பிடித்த பாட’லைப் பாடி, அதையும் எல்லோருக்கும் பிடிக்கவைத்தார்.

இசைஞானியுடன் ‘பிதாமகனில்’ இணைந்து ‘இளங்காத்து வீசுதே’ என இளசுகளையும் உருகவைத்ததுடன், எல்லோருடனும் இசைப் பயணத்தையும் தமிழகத்தில் தொடர்ந்தார்.

’விருமாண்டி’யில் ‘உன்னவிட இந்த உலகத்துல உசந்ததில்ல’ என ஒலித்தவர், ’7ஜி ரெயின்போ காலனி’யில் ‘நினைத்து நினைத்து’ எனப் பாடி இளைய தலைமுறையின் இதயங்களில் நிறைந்துகொண்டார்.

’சாட்டை’யில் ‘சகாயனே’ எனப் பாடி ரசிக நெஞ்சங்களில் சங்கமித்தவர், ’சண்டகோழி’யில் ‘தாவணி போட்ட தீபாவளி’யாய் தூங்கிய நெஞ்சங்களைத் தட்டி எழுப்பினார்.

அப்படி உறக்கத்தில் எழுந்தவர்களை, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ மூலம் ’மயிலாஞ்சி… மயிலாஞ்சி’ எனச் சொல்லவைத்தார்.

மேலும், ‘ஒரு வெட்கம் வருதே’ என ‘பசங்க’ படத்தில் பாடியது மட்டுமல்லாது, உண்மையான பசங்களுக்கும் வெட்கத்தை வரவைத்தார். அவர்களை அதோடு நிறுத்திவிடாமல், ‘சில்லுனு ஒரு காதல்’ மூலம் ‘முன்பே வா என் அன்பே வா’ என அன்பாய் அழைத்து காதல் குளிரூட்டினார். தொடர்ந்து, ‘அய்யய்யோ’ எனப் ‘பருத்திவீரன்’ படம் மூலம் பல இளைஞர்களையும் புலம்பவைத்த வேளையில், ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில், ‘மன்னிப்பாயா’ எனக் கேட்டு, அவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் இடம்பிடித்தார்.

தமிழ் இசையமைப்பாளர்களுடன் பயணித்த ஸ்ரேயா

’பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’ என வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ஸில் பலரையும் சொல்ல வைத்தவர், அதற்குப் பின்பு அவரது பாடல்களை மட்டுமே ரசிகர்கள் எண்ணிச் சொல்லும் அளவுக்கு முன்னேறினார். அது மட்டுமல்ல, ‘கள்வரே’ என ’ராவண’னிலும், ‘காதல் அணுக்கள்’ என ’எந்திர’னிலும், ’றெக்கை முளைத்தேன்’ என ‘சுந்தர பாண்டி’யிலும் ரசிகர்களைச் சுற்றிச்சுற்றி வலம்வர வைத்தார்.

தொடர்ந்து, அன்பே.. பேரன்பே (என்.ஜி.கே.), சாரகாற்றே (அண்ணாத்தே), கண்டாங்கி (ஜில்லா), வானே.. வானே (விஸ்வாசம்) எனத் தமிழ்த் திரையுலகில் வலம்வரும் இசையமைப்பாளர்களின் (இளையராஜா, மணிசர்மா, கார்த்திக்ராஜா, கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், தேவா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சுந்தர்.சி பாபு, ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, தீனா, ஜோஸ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீபிரசாத், சித்தார்த் விபின், சாம் சிஎஸ். ஜஸ்டின் பிரபாகரன்) இசைத் தேர்களை எல்லாம் நித்தம்நித்தம் வடம்பிடித்து இழுத்த ஸ்ரேயா கோஷல், ‘ஐ’ படத்தில், ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்றார், அவருடைய குரலுக்கு என்றும் ஓய்வு கொடுக்காமல்.

குரலுக்கு ஓய்வு கொடுக்காமல் ஒவ்வொரு மொழிக்காகவும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஸ்ரேயா கோஷல், இதுவரை 20 மொழிகளில் (இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, மராத்தி, போஜ்புரி, அங்கிகா, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம், பிரெஞ்சு) 5,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மிகவும் வியப்பான விஷயம்.

இதையும் படிக்க: “ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப்பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை”- கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்தநாள்!

தமிழ் மொழியில் உயரத்தைத் தொட்ட ஸ்ரேயா

வரவேற்கும் அனைவரையும் உபசரிக்கும் அன்னையாய் விளங்கும் இந்த சென்னை மண்ணும், ஏற்கெனவே வடக்கில் இருந்த வந்த பல பாடகிகளைப் பாடவைத்து பரிசு கொடுத்து மகிழ்வித்திருக்கிறது. அந்தப் பட்டியலில், இந்த நூற்றாண்டின் ’மெலோடிஸ் குயி’னாய், மேற்கு வங்கத்தின் மெல்லிய புன்னகைப் பெண்ணான ஸ்ரேயாவையும் இணைத்துள்ளது. ’இசைக்கு மொழிகள் முக்கியமல்ல’ என்று சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில், இவர் பாடும் மொழிகள் எல்லாமே அந்த மாநிலத்தின் பாடகியாக ஆக்கிவிடுவதுதான் அபூர்வம்; ஆச்சர்யம். இன்னும் சொல்லப்போனால், தமிழ் மொழி தெரியாமல் வந்த பல பாடகிகளில், கொஞ்ச காலத்திலேயே காணாமல் போனவர்கள் உண்டு. ஆனால், அம்மொழி பிறந்த மண்ணிலேயே தடம்பதித்து, தனக்கென ஓர் இடத்தையும், அடையாளத்தையும் தக்கவைத்துக் பெருமை சேர்ப்பதில் உண்மையில், ஸ்ரேயா கோஷல் ஓர் உயரத்தைத் தொட்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஸ்ரேயா கோஷலின் குரல் மட்டும் அழகல்ல.. அழகு நிறைந்த தேவதைதான் அவரும். அதனால்தான் பாலிவுட் முதல் படம் எடுக்கும் எல்லா மொழிகளும் அவரை கேமரா ஃபிரேமுக்குள் கொண்டுவர நினைத்தன. ஆனால், சினிமாத் துறையை நன்றாகத் தெரிந்துகொண்ட ஸ்ரேயா, அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதுடன், எம்மொழியாயினும் குரலுக்காக மட்டும் உறக்கமில்லாதவராய், ஓய்வில்லாதவராய் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உற்சாகமாய் ஓடுகிறார். அந்த துள்ளலில் அம்மொழி மக்களையும் தம் குரலோடு கட்டி வைத்து அழகு பார்க்கிறார். இதுதானே உண்மையான அழகு.

இதையும் படிக்க: மக்களின் அவஸ்தை முதல் அபராதம் வரை: பெங்களூருவை வாட்டிவதைக்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. முழு அலசல்!

மேற்கு வங்கத்தின் மெலோடி குயினுக்கு பிறந்த நாள் வாழ்த்து

”காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இசையும் அப்படித்தான்” என்று சொல்லும் ஸ்ரேயா கோஷல், “எனது ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் பசுமையான நினைவுகள் இருக்கின்றன. அது உணர்வுபூர்வமானவை” என்கிறார்.

இன்றைய இசை உலகில் பெரும்பான்மையான இசையமைப்பாளர்கள், அந்தக் காலத்தைப் போன்று நிம்மதியான, நிலையான இசையைத் தருவதில்லை. முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை உருவாக்க விருப்பமில்லை. காசுக்காகவும், கடமைக்காகவும் பணியாற்றுவதாக இருக்கிறது. அதனால்தான் தற்போது வரும் பாடல்களும் இசையும் புயல்காற்றைப்போல மறைந்து போய்விடுகின்றன. மனதில் நிற்காத அளவுக்குத் தூரமாய் விலகிச் சென்றுவிடுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஓரிரு நாளோ அல்லது அடுத்த ஒரு வாரம் மட்டுமே கேட்கும்படியாக இருக்கிறது. இன்னும் சிலரோ, ஒருசில பழைய பாடல்களை ரீமெக்ஸ் செய்கின்றனர். இதையெல்லாம் விரும்பாதவர் ஸ்ரேயா கோஷல். ஆம், இதுகுறித்து அவர், “பாடல்களை ரீமிக்ஸ் செய்வதையோ மறு உருவாக்கம் செய்வதையோ தாம் விரும்பவில்லை. ’தாம் பாடிய பாடல்களை அப்படிச் செய்யலாமா’ என்று கேட்டால் மறுத்துவிடுவேன்” என்கிறார் உறுதியாக.

இளம்வயது முதல் இசைமீது காதல் கொண்டிருக்கும் ஸ்ரேயா, தன் கணவரையும் காதல் மூலமாகவே தேர்ந்தெடுத்தார். அந்தக் காதலின் அடையாளமாகப் பிறந்த ஆண் குழந்தை மூலமாக, ஓர் அன்னையாகவும் உலகம் முழுவதும் வலம் வருகிறார், இந்த மேற்கு வங்கத்தின் மெலோடி குயின். இன்று, பிறந்த நாள் காணும் அவரை, இன்னும் பலப்பல புதிய தளங்களில் வெற்றிபெற்றிட, புதிய தலைமுறை என்றும் எப்போதும் வாழ்த்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com