இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் -2 படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.
வழக்கமாக சினிமாக்களில் 40 அடி உயரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கிரேன்களையே அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய பிரமாண்ட கிரேனை, 200 அடி உயரம் வரை உபயோகிக்க முடியும். வெயிட்லோடில் செய்த மனித தவறே இந்த விபத்திற்கு அடிப்படைக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.