‘இந்தியன்2’ படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘இந்தியன்2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக இணை இயக்குநர் குமார் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேலாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியன் இரண்டாம் பாகம் படத்துக்காக, சென்னை அருகேயுள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நேற்றிரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 9 பேர் காயமடைந்தனர். இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். மதனின் இளைய மகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணா, மனைவியுடன் இணைந்து பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் நடிகர் கமலும், இயக்குநர் ஷங்கரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.