ஒரு காலகட்டத்தில் ஆங்கில தனி இசைப்பாடல்கள் கடல் கடந்தும் பிரபலமாக இருந்தன. இந்திய மொழிகளில் தனிஇசைப்பாடல்கள் வெகு சொற்பம் என்ற நிலையில், திரையிசைப்பாடல்களை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக, தற்போது தமிழில் தனி இசைப்பாடல்கள் வெளியாகி வியாபார ரீதியில் வெற்றியடையத் தொடங்கியுள்ளன.
சமீபகாலமாக தமிழில் வெளியாகும் தனி இசைப்பாடல்கள் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. எஞ்சாய் எஞ்சாமி. வாடா ராசா, குட்டிப்பட்டாசு என தனி இசை பாடல்கள் வெகுஜன ரசிகர்கள் மத்தியிலும் சென்றடைந்து வருகின்றன.
எஞ்சாய் எஞ்சாமி பாடலை சுமார் 34 கோடி பேரும், குட்டி பட்டாசு பாடலை 13 கோடி பேரும், வாடா ராசா பாடலை ஒரு கோடியே 30 லட்சம் பேரும் இதுவரை இணையதளத்தில் கண்டு ரசித்துள்ளனர். இதுபோன்ற தனி இசைப்பாடல்கள் வெற்றிபெறுவதன் மூலம், புதிய களம் கிடைத்துள்ளதாக, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பாடல்களை உருவாக்குவது YouTube, Music Label உள்ளிட்ட தளங்கள் மூலம் வருமானம் கொடுக்கும் வாய்ப்பாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ள தனி இசைப்பாடல்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.