”பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் அறையே தற்போது இல்லை” என்று அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவின் முன்பு செய்தியாளர்களிடம் விவரித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், “ஸ்டூடியோ அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. இளையராஜா இருந்த அறையே இல்லை. அந்த அறையின் பூட்டின் சாவி இளையராஜாவிடம் உள்ளது. அந்த அறை தகர்க்கப்பட்டு, அங்கு இருந்த பொருட்கள் எல்லாம் தனி குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து இளையராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் மிக மிக மனம் உடைந்துவிட்டார். ‘அந்த அறையை பார்க்க வேண்டும். பொருட்களை பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் அங்கு வருவதாகச் சொன்னேன். அந்த அறையே இல்லையென்றால் நான் அங்கு வந்து செய்வது? என்னுடைய மன வேதனை இன்னும் அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என இளையராஜா கூறினார். அடுத்துகட்டமாக என்ன செய்வது என்று இளையராஜாவோடு கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும், தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கோரியும் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை வாபஸ் பெற்றால் அனுமதிக்கிறோம் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இளையராஜா வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து தியானம் மேற்கொள்ளவும், பொருட்களை எடுத்துச்செல்லவும் இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒருநாள் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.