இளையராஜா ராயல்டி கேட்பது நியாயமில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர்

இளையராஜா ராயல்டி கேட்பது நியாயமில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர்
இளையராஜா ராயல்டி கேட்பது நியாயமில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர்
Published on

இசை அமைக்க தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கும் போது இளையாராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை என இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, இசைக்கலைஞர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு. என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும். இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, இனி தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இளையராஜாவின் இந்த அறிவிப்புக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இசை அமைக்க தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கும் போது இளையாராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை என இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், திரைப்படத்தில் எந்த சூழ்நிலைக்கு பாடல் தேவை என்பதை இசையமைப்பாளரிடம் கூறுகிறோம். அதற்கு ஏற்பவே இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அந்த இசைக்கு ஏற்ப ஒருவர் பாடல் வரிகளை எழுதுகிறார். அவருக்கும் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கிறார். இசையமைப்பாளர் கேட்கும் இசைக்கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் தான் பணம் கொடுக்கிறார். எனவே ஒரு தயாரிப்பாளர் தான் பணத்தை செலவு செய்து ஒரு பாடலை சொந்தமாக்குகிறார் என்று தெரிவித்தார்.

தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த  எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழக தேர்தலில் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். மக்கள் மனதில் ஆளுபவர்கள் நல்லவர்கள் அல்ல என தாக்கம் ஏற்பட்டுள்ளது. மாற்றத்தின் வெளிப்பாடு அடுத்த தேர்தலில் தெரியும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தயாரிப்பாளர்களின் உரிமை என்றும் அது தங்களுக்கே வரவேண்டும் என்றும் பி.டி.செல்வகுமார் தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் இளையராஜா மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com