இசைஞானி இளையராஜாவின் 76 வது பிறந்த நாள் இன்று. தேனி மாவட்டம் பண்ணைபுரம் எனும் சிறு கிராமத்தில் பிறந்த இளையராஜாவின் இசை பயணத்தை பார்க்கலாம்.
திரைப்பட இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களுக்கு மெருகூட்டுவார்கள். ஆனால், இளையராஜா மட்டும்தான் அதற்கு உயிரூட்டுவார் - இது திரைத்துறையினர் இசைஞானியைப் பற்றி புகழ்ந்து கூறும் வார்த்தைகளாகும்.
1970களில் தமிழ்த் திரையிசையில் ஒரு வறட்சி ஏற்பட்டு, திரும்பிய இடமெல்லாம் இந்திப் பாடல்கள் ஒலித்த காலம். இந்திக்கு எதிராக குரல் ஒலித்த ஒரே மாநிலமான தமிழகத்தில், பொருளே புரியாவிட்டாலும் இந்திப் பாடல்கள் எங்கும் ஒலித்தன. இந்த நிலையை மாற்றி, மண்ணின் மணம் கமழும் இசையை தவழவிட்ட பெருமை இளையராஜாவுக்கே உண்டு.
அன்னக்கிளியில் அறிமுகமாகி பதினாறு வயதினேலே, பொண்ணு ஊருக்குப் புதுசு, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் என கிராமியப் பின்னணி கொண்ட படங்களுக்கு இளையராஜாவின் இசைதான் அடிநாதமாக விளங்கியது. மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் தந்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.
நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை மட்டுமின்றி கர்நாடக செவ்விசை மெட்டுகளிலும் இவர் இசையமைத்த பாடல்கள் எட்டுத்திக்கும் ஒலித்தன. மிகவும் கடினமான ராகங்களிலும் அவர் பாடல்களை தந்துள்ளார். திரை இசையில் பலரும் தொடத் தயங்கும் ராகங்களைத் தொட்டவர் ராஜா என்று, அதனைப்பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
70 மற்றும் 80களில் பல நடிகர்களுக்கு அடையாளத்தையும், அபரிமிதமான வெற்றியையும் தந்தது இளையராஜாவின் பாடல்கள்தான் என்பதை அனைவரும் அறிவர். இசை தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு ராஜாவின் பாடல்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என இசை அறிஞர்கள் கூறுகின்றனர். இசைஞானி இளையராஜாவை இசைராஜா என்று திரையுலகினர் புகழ்வதில் வியப்பேதும் இல்லை. சிலரால் விருதுகள் பெருமை பெறும் என்று கூறுவார்கள். அது இளையராஜா விசயத்தில் சரியாகப் பொருந்தும்.