ஐயா.. தமிழ் இயக்குநர்களே இனிமேல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க என தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியானது. படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படத்தில் மும்பை போலீஸ் கமிஷ்னராக ரஜினி நடித்திருக்கிறார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழ் இயக்குநர்களே இனிமேல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க என தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐயா, தமிழ் இயக்குனர்களே இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது” என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியுடன் கூடிய பின்புலத்தில் ‘தர்பார்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதனை நேரடியாக குறிப்பிடாமல் அலெக்ஸ் பால் மேனன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.