'குஞ்சன் சக்சேனா' படத்தில் இந்திய விமானப் படையினர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியுள்ளது.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், குஞ்சன் சக்சேனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்திய விமானப் படையினரை தவறாக சித்தரித்துள்ளது என்றும், அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், திரைப்படம் மற்றும் ட்ரெய்லரில் வரும் சில காட்சிகள் மற்றும் உரையாடல்கள், இந்திய விமானப்படையை தேவையற்ற முறையில் எதிர்மறையாக சித்தரிப்பது கண்டறியப்பட்டது. இந்திய விமானப்படை பாலின பேதம் காட்டுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவற்றை நீக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை. காட்சிகளின் போது மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை” என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.