‘பிகில்’ திரைப்படத்தின் கதைக்கு உரிமைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உதவி இயக்குநர் செல்வா தெரிவித்துள்ளார்.
‘தெறி’,‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
முன்னதாக ‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி உதவி இயக்குனர் S.P. செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இது தொடர்பான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த வழக்கை செல்வா திரும்பப் பெற்றுள்ளார். இது குறித்து பேசிய செல்வா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர போவதாகவும், அதனாலே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ''வழக்கை வாபஸ் பெற்றதை பிகில் படக் குழுவினர் தவறாக விளம்பரப்படுத்துகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்'' எனவும் தெரிவித்துள்ளார்.