தமிழில், மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் கேத்தரின் தெரசா. இப்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ’கதாநாயகன்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
துபாயில் பிறந்து வளர்ந்த இவர் கூறும்போது, ’அங்கு படிக்கும் போது பியானோ, பாடல்கள் எல்லாவற்றையும் கற்றுவந்தேன். ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் படிப்பிலும் நான் டாப் லெவலில்தான் இருந்தேன். சின்ன வயதில் கூச்ச சுபாவம் கொண்டவளாகத்தான் இருந்தேன். பிறகு கூட்டத்தில் பழகி பேசி என்னை நானே உயர்த்திக்கொண்டேன். கல்லூரி படிப்பிற்காக நான் இந்தியா வந்தேன். இதன் காரணமாக எனது பியானோ, பாடல் பயிற்சி எல்லாம் போய்விட்டது. சினிமாவுக்கு வந்து தமிழில் கார்த்தி, தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் உபேந்திரா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். இது என் அதிர்ஷ்டம்தான். அடுத்து தேஜா இயக்கத்தில் ராணாவுடன் ’நான் ஆணையிட்டால்’ படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்திக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்கிறார்கள். எனக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லும் எண்ணமில்லை’ என்றார்.