ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா?

ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா?
ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா?
Published on

ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதற்கு பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கப்படுவது தான் காரணம் என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

கர்நாடக திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அதாவது ரூ.80 கோடி செலவில் ‘கே.ஜி.எப்.’ படம் உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. வெளியான 10 நாட்களில் ரூ.150 கோடியை வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. இந்த படம் தான், கன்னட சினிமாவில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்தது என்கிறார்கள். இதன் வெற்றி மற்றும் வசூல் குறித்து மீடியாவில் பெரிய அளவுக்கு பேசப்பட்டது. அதே போல் சிவராஜ்குமார், சுதீப் நடித்த ’வில்லன்’ படமும் மெஜா பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்டு வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து புனித் ராஜ்குமார் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும், ’நட சர்வபவ்மா’ படமும் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

(கே.ஜி.எப் படத்தில் யஷ்)

இந் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னணி ஹீரோக்களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் ’லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ’கே.ஜி.எப்’. பட தயாரிப்பாளர் விஜய்கிரகந்தூர், சி.ஆர்.மனோகர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங் களில் சோதனை நடத்தினர். காலை 6 மணியில் தொடங்கிய சோதனை மாலை வரை நடந்தது.

சோதனை நடந்தபோது, நடிகர் ’நான் ஈ’ சுதீப் மைசூருவில் ஷூட்டிங்கில் இருந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பினார். அதே போல் மும்பை சென்றிருந்த நடிகர் யஷ்-சும் பெங்களூரு திரும்பினார்.

(சிவராஜ் குமார், யஷ், புனித் ராஜ்குமார்)

இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக திரையுலக வரலாற்றில் இப்படி பெரிய அளவில் வருமானவரித் துறை சோதனை நடப்பது இதுதான் முதல் முறை. இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

வருமானவரி சோதனை குறித்து நடிகர் சுதீப் கூறும்போது, ‘’ எனது அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வந்தேன். வருமான வரித்துறையினர் அவர்களின் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகில் வெளியாகி வருகின்றன. இதுதான் வருமான வரி சோதனைக்கு காரணம் என்று நினைக்கிறேன்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com