”15 வருடங்களுக்கு முன்பு இதேநாளில்தான் ’ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ என்று சொன்னேன்” என்று தான் இயக்குநராக பணியாற்றிய முதல் நாளை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்குநராவதற்கு முன்பு ’காதல் சாம்ராஜ்யம்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘சிவகாசி’, ‘வாழ்த்துகள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்பு, சூப்பர் ஹிட் அடித்த ‘சென்னை 28’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
அதிக புதுமுகங்களைக் கொண்டே கிரிக்கெட் கதைக்களத்தை நகைச்சுவையோடு ரசிக்கவைக்குபடி காட்சிப்படுத்தியிருப்பார். முதல் படத்திலேயே தமிழக மக்களின் கவனம் ஈர்த்து தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரானார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் தனக்கு இயக்குநர் என்ற அடையாளத்தைக் கொடுத்த ‘சென்னை 28’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு துவங்கி 15 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், ”15 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக இதேநாளில்தான் ‘ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன்’ என்று சொன்னேன்.என்னை உங்கள் இதயத்தில் இடம் கொடுத்ததற்காக கடவுளுக்கும் மக்களுக்கும் என்றென்றும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார். ’சென்னை 28’ கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.