நான் ஒரு பெண்ணியவாதியல்ல என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார்.
த்ரிஷாவை வெள்ளித்திரையில் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன. கடைசியாக அவரை ‘கொடி’யில் பார்த்தது. ஆனால் அந்தப் படத்தில் த்ரிஷா ஏற்றிருந்த அரசியல்வாதி கதாப்பாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு அவரது சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்கள். ஆகவே அவர் அதிகம் திரை வாழ்க்கை பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்த இடைவெளியை நிரப்புவதற்கான முயற்சியில் அவர் மும்முரமாக இருக்கிறார். அவர் நடித்துள்ள ‘மோகினி’ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டியாக இருக்கும் பேய்க் கதையில் அவரும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முதன்முறை நாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில் நடித்திருக்கிறார். ஆகவே அவரது அடுத்த கட்ட சினிமா பயணத்திற்கு ‘மோகினி’ பின்புலமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அவர் நடிக்க இருந்த ‘சாமி ஸ்கொயர்’ கதாப்பாத்திரமும் கடைசி நேரத்தில் நழுவிப்போனது.
இந்நிலையில் ‘மோகினி’ பட வெளியீட்டுக்காக த்ரிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக நயன் பற்றிய கேள்விக்கு, “நானும் நயன்தாரா சிறந்த நண்பர்கள். எங்கள் நட்பையும் போட்டியையும் வேறுவிதமாக ஊடகங்கள் எழுதுகின்றன. எனக்கு சினிமா துறையில் நண்பர்கள் இல்லையென்றாலும் எல்லோருடனும் ஆரம்பத்தில் இருந்தே நான் சுமூகமாக இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் சினிமா உலகத்திற்கு வெளியே இருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்ரீரெட்டி குறித்த கேள்விக்கு, “நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது குறித்து எந்த யோசனையும் இல்லை. அதை பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது அவருக்கு வெறும் மைலேஜ்ஜை மட்டுமே தரும்” என்றார் த்ரிஷா. மேலும் தான் ஒரு பெண்ணியவாதி இல்லை என்றும், ஆண், பெண் சமத்துவத்தை நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.