கறுப்பு வெள்ளை காலத்து திரைப்படங்களை விரும்பி பார்ப்பதாக நடிகை பூஜா குமார் தெரிவித்துள்ளார்.
இந்தோ- அமெரிக்கன் நடிகை பூஜா குமார். 2000ம் ஆண்டே இவர் தமிழில் நடித்திருந்தாலும் அவரை அதிக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’. அவர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவே அவரது மார்க்கெட் மதிப்பு முன்பைவிட கூடுதலானது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை முடித்த பூஜா ‘விஸ்வரூபம்2’விலும் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 10 அன்று திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் அவர் தனது அனுபவங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், “ நான் ‘ஏக் துஜே கே லியே’படத்தில் இருந்தே கமல்ஹாசனின் ரசிகை” என்று கூறியுள்ளார். மேலும் “ என் வாழ்நாள் முழுக்க நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஆனால் என் வேலைகள் இங்கே இருக்கின்றன. ஆகவே மும்பையில் இருக்கிறேன். அதற்காக என்னை நான் அழுத்துக் கொள்வதில்லை. நான் உறுதியாக இந்தி சினிமாவை ஆராய விரும்புகிறேன்.
இது நடிகைகளுக்கு ஒரு நல்ல நேரம். இந்திய சினிமாக்களை பார்த்து என்னை வளர்த்து கொள்கிறேன். மிக அழகான இந்திய கலாச்சாரத்தை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நான் விரும்பி கறுப்பு வெள்ளை காலத்து படங்களை பார்க்கிறேன். 1960 மற்றும் 1970களில் வெளியான முற்போக்கான திரை இயக்குநர்களான சத்யஜித் ராய், கே. பாலசந்தர் படங்களை பின்பற்றுகிறேன். ‘சாருலதா’, ‘அவர்கள்’ போன்ற திரைப்படங்கள் பெண் பாத்திரங்களை மையமாக கொண்டு வெளியாகின. சுவாரஸ்யமான மற்றும் சிக்கலானவற்றை மிக யதார்த்தமாக இணைத்தன. இதனை 1990களுக்கு பின் சினிமா இண்டரஸ்ட்ரி இழந்துவிட்டது”என்று பூஜா குமார் கூறியிருக்கிறார்.