ஒவ்வொரு தேர்தலிலும், சில பிரபலங்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று ஊகித்து கதைகள் ஊடகங்களில் வெளிவருவது வழக்கம். மலையாள நடிகர் மம்முட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. நடக்கவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சிபிஎம் தரப்பில் அவர் அரசியலில் நுழைய இருக்கிறார் என்றும், சிபிஎம் ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. காரணம், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பயோபிக் திரைப்படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இது தொடர்பாக பினராயி விஜயனை சில முறை சந்திக்கவும் செய்தார் மம்முட்டி.
இந்தநிலையில்தான் இந்த வதந்திகளுக்கு தற்போது பதில் அளித்து இருக்கிறார் நடிகர் மம்முட்டி. தற்போது நடித்து வரும் `தி பிரிஸ்ட்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு கொச்சியில் நடந்த நிலையில், அதில் கலந்துகொண்ட அவரிடம், அரசியலில் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, ``தேர்தல் அரசியலில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. எனக்குத் தெரிந்த மிகப்பெரிய அரசியல் என்னவென்றால், எனது திரைப்படங்களின் மூலம் நான் பயிற்சி செய்வதே. எந்தவொரு கட்சியும் என்னிடம் தேர்தலில் போட்டியிடச் சொல்லவில்லை. எந்தவொரு கட்சியும் தேர்தலில் போட்டியிட என்னை அணுகவில்லை. அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை" என்று நடிகர் திட்டவட்டமாக கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``கொரோனா காலத்தில் திரையுலகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா வகையான பொழுதுபோக்குகளும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு இரண்டாம் நிலை. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இறுதியாக இந்த திரைப்படத்தை வெளியிடுகிறோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் - பல தயாரிப்பாளர்களைப் போலவே - இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என விரும்புகிறார். தயாரிப்பாளர் ஓடிடி வெளியீட்டைக் காட்டிலும் தியேட்டர் வெளியீட்டை விரும்புகிறார்" என்று கூறினார்.
நடிகர் மஞ்சு வாரியர், இயக்குனர் ஜோஃபின் டி சாக்கோ, தயாரிப்பாளர்கள் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் அன்டோ ஜோசப் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதற்கிடையில், மஞ்சு வாரியர், இந்தியில் தனது முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். மேலும், அவர் நடிப்பில் உருவான பிரதி பூவன்கோழி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.