எக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்: இயக்குநர் தங்கர் பச்சான்!

எக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்: இயக்குநர் தங்கர் பச்சான்!
எக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்: இயக்குநர் தங்கர் பச்சான்!
Published on

இயக்குநர் தங்கர் பச்சான் கொரோனா ஊரடங்கு சூழலில் 13 நாட்களிலேயே எக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் ’அழகி’ படத்தை இயக்கியிருந்தார். அந்த ஆண்டின் பெரும் வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்ததோடு, சிறந்த பின்னணி பாடகியாக பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி பாடலுக்காக சாதனா சர்கமிற்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான களவாடிய பொழுதுகள் படம்தான் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்.

இந்நிலையில், தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ”மறுமலர்ச்சி படம் பாகம் 2 வில் நான் வேலை செய்யப்போவதாக தவறான தகவல் வந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் யாரும் பேசவில்லை.நான் கடந்த ஒரு மாதமாக வெளியூரில் அமைதியான சூழலில் கதை எழுதி வருகிறேன். ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.

 இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது எழுதி முடித்தேன். தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.

 முழுமையான இரண்டு வாரங்களில் இடைஞ்சல் இல்லாத  தூய்மையான காற்று.. தூய்மையான நீர்.. இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன். கொரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும்  மறக்கச் செய்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார், தங்கர்பச்சான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com