''100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். ஆகவே நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்'' என நடிகர் விஷால் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடிகர் விஷால் வழிபாடு நடத்தினார். வழிபாட்டிற்காக தர்காவிற்கு வந்த நடிகர் விஷாலை நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தர்காவில் வழிபாடு நடத்திய விஷால் அமீன் பீர் தர்காவின் வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால்... கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு பல நாட்களாக வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், வர முடியவில்லை. தற்பொழுது முதல் முறையாக வந்துள்ளேன். நான் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள மாட்டேன். பிரார்த்தனைகள் வெளியே கூறக்கூடாது என்பார்கள். கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக நான் வந்துள்ளேன். அவ்வாறு வரும் போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அந்த எனர்ஜி தற்பொழுது கடப்பா தர்காவில் தரிசனம் செய்த போது எனக்கு முழு அளவில் கிடைத்ததாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.
நான் அல்லாவையும், வெங்கடேஸ்வர சுவாமியும் இயேசுவையும் வழிபடுவேன். எனக்கு மதம் என்ற பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுளையும் மதிக்க கூடியவன். முதல்வர் ஜெகன்மோகன் பாதயாத்திரையை மையமாகக் கொண்டு திரைப்படம் வருவது நல்ல தகவல். அவர் பாதையாத்திரையின் போது பலர் அவரை நேரில் பார்த்திருப்பார்கள். ஆனால் நேரில் பார்க்காதவர்கள் அவர் பட்ட சிரமங்கள் அனைத்தையும் இந்த திரைப்படத்தின் மூலமாக பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
நான் முதல்வர் ஜெகன் கேரக்டரில் நடிக்கவில்லை. வரும் டிசம்பர் மாதம் லட்டி திரைப்படம் வெளியாக உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஜாக்கிரதையாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்காமல் ஏழைகளுக்கு உதவியும் செய்யலாம். ஐந்து நிமிடம் பட்டாசு வெடிக்கும் காசில் ஏழைகளின் வயிறு நிறைய அன்னதானம் செய்தால் மிகவும் புண்ணியம் கிடைக்கும். யாராக இருந்தாலும் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். ஆகவே நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்'' என அவர் தெரிவித்தார்.