தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளியின் 4வது எபிசோடு முடிவடைந்த நிலையில், விரைவில் 5வது எபிசோடு தொடங்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், இந்த தொடரிலும் நடுவராக பிரபல செஃப் வெங்கடேஷ் பட் தொடர்வார் என்ற தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தன. இதுதொடர்பான தகவல்களை கவனித்து வந்த வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளியின் 5வது சீசனில் தான் தொடரவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புது சீசன் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதிலும், நான் நடுவராக பங்கேற்பதாக சமூகவலைதளங்களில் பேசப்படுவதை பார்க்க முடிந்தது. தொடங்க இருக்கும் புது சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்துகிறேன்.
ஒரு அற்புதமாக நிகழ்ச்சியாக, லட்சக்கணக்கானவர்களை மகிழ்வித்து வந்த இதில் இருந்து நான் ஒரு பிரேக் எடுக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனது ஜாலியான பக்கத்தை காட்டியது. என்னையும் என் இயல்பிலேயே வசதியாக வைத்திருந்தது. கடந்த 24 ஆண்டுகளாக நான் பயணித்த சேனலுக்கு நன்றி சொல்கிறேன். இந்த நேரத்தில் புதிய பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறேன்.
இப்போதைய காலகட்டத்தில் பல்வேறு அழுத்தமான சூழல்களை எதிர்கொள்பவர்களை சிரிக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சியை நடத்தி வரும் ஒட்டுமொத்த குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இது ஒரு கடினமான முடிவுதான் எனினும், ஒரு புதுவிதமான கான்செப்டுடன் உங்களை வந்து சந்திக்கிறேன். தொடங்க இருக்கும் 5வது சீசனில் பங்கேற்க இருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது ஃபேஸ்புக் பதிவிற்கு நூற்றுக்கணக்கானோர் உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இவரது விலகலுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.