''உதயநிதி ஸ்டாலினிடம் சென்று வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என கேட்க போகிறேன்'' என்கிறார் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு.
நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தில், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்துள்ள படம் வாரிசு. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இருந்தும் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இதே போல நடிகர் அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள் திரையரங்குகளில் ஒன்றாக வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. இதனிடையே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இந்த இரண்டு படங்களுக்கும் சம அளவில் '50% - 50%' தியேட்டர்கள் கொடுக்கப்படும் என துணிவு படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் வெளியிடும் படங்களுக்கே அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படும் என்றுகூறி, இதனால் விஜய்யின் வாரிசு படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், "ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என கேட்க போகிறேன். தியேட்டர்களை சம அளவில் பிரித்து கொடுப்பதாக சொல்கிறார்கள், கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1. இது பிஸ்னஸ்" என கூறியுள்ளார்.
தவற விடாதீர்: தமிழ் சினிமாவில் இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள் #2022Rewind