மக்களின் ஆசிர்வாதத்தால் நான் நலமாக உள்ளேன் என்று கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர்.
அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த நடிகர் வடிவேலு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வடிவேலு, நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய அவர், புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது...
"நான், இயக்குனர் சுராஜ், தமிழ் குமரன் ஆகியோர் 30 ஆம் தேதியே (கடந்த ஆண்டே வந்துட்டேன்) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் நலம் விசாரித்தனர். மக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக உள்ளேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன்" என்றார்.